அது கண்டிப்பாக தவறுதான், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. 'சந்திரமுகி 2' இசை வெளியீட்டு விழா குறித்து ராகவா லாரன்ஸ்..!

  • IndiaGlitz, [Sunday,August 27 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்களால் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இது குறித்து வீடியோவும் இணையதளங்களில் வைரலான நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

’சந்திரமுகி 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கல்லூரி மாணவர் ஒருவரை பவுன்சர்கள் அடித்ததாக அறிந்தேன். இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் எனக்கோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கோ தெரியவில்லை.

மாணவர்களை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதும் அவர்கள் வளர்ச்சியை நான் எந்த அளவு விரும்புகிறேன் என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நபராக இருப்பதால் இது போன்ற சண்டைகளுக்கு எப்போதும் நான் எதிரானவன்.

அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது என்பது கண்டிப்பாக தவறான செயலாகும். அதிலும் குறிப்பாக மாணவர் விஷயத்தில் இது நடந்திருக்க கூடாது.

இந்த சந்திரமுகி 2 நிகழ்ச்சியில் நடந்ததற்காக நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பவுன்சர்கள் இனிமேல் அடிப்பது போன்ற செயல்களில் ஈடு வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.