புது வரலாற்றுச் சாதனை படைத்த ரஃபேல் நடால்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 21 ஆவது கிராண்ஸ்ட்லாம் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ஸ்ட்லாம் பட்டம் வென்றதைத் தொடர்ந்து முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் சாதனை படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடால் ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவ்வுடன் கடுமையாக மோதி இந்தச் சாதனையைப் படைத்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடெரர், செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஸ்பெயின் நாட்டு ரஃபேல் நடால் ஆகியோர் தலா 20 முறை கிராண்ஸ்ட்லாம் பட்டம் வென்றிருந்தனர். தற்போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து 21 கிராண்ட்ஸ்ட்லாம் பட்டம் வென்று ரஃபேல் புது வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.

கடந்த 2005 இல் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றபோது நடாலுக்கு 19 வயது. பின்னர் அஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கு கிராண்ட்லாம் பட்டங்களையும் குறைந்தது இரண்டு முறை வென்றவர்களில் ஒருவர் என்ற சாதனையையும் படைத்தார்.

தற்போது ஆஸ்திரேலிய ஓபனை இரண்டாவது முறை வென்ற இவர் 13 முறை பிரெஞ்ச் ஓபனை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் தட்டிச்சென்றுள்ளார். இதனால் 35 வயதாகும் நடால் இப்போது உலக ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.