2024 நாடாளுமன்ற தேர்தல்.. ராதிகா பின்னடைவு.. விஜய பிரபாகரன் முன்னிலை..!
- IndiaGlitz, [Tuesday,June 04 2024]
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளிலும், தமிழக அளவில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் சில ஸ்டார் தொகுதிகள் இருந்து வரும் நிலையில் அதில் ஒரு முக்கியமான தொகுதியாக விருதுநகர் தொகுதி பார்க்கப்பட்டது. இந்த தொகுதியில் தான் திரை உலகை சேர்ந்த ராதிகா மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இருவருமே போட்டியிட்டனர்.
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் சிட்டிங் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் அவர்களும் போட்டியிட்டார்.
இந்த நிலையில் தற்போது முன்னிலை விவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் 73622 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 68455 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 27240 பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் கவுசிக் இந்த தொகுதியில் 14925 வாக்குகள் பெற்றுள்ளார்.
விஜய பிரபாகரன் வாங்கிய வாக்குகளை விட ராதிகா கிட்டத்தட்ட 46 ஆயிரம் குறைவாக பெற்றுள்ளதால் அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கும் விஜய் பிரபாகரனுக்கும் இடையே சுமார் 5000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் சில சுற்றுகளில் முடிவுகள் மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலவரம் இன்று காலை 11.40 மணி நிலவரம் என்ற நிலையில் இன்று மாலைக்குள் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்து விடும்.