ராட்சசி: திரைவிமர்சனம் - கல்விப்புரட்சிக்கு ஒரு விதை!
ஒரு மோசமான அரசு பள்ளியை மாநிலமே போற்றும் வகையில் ஒரு தலைமை ஆசிரியை நினைத்தால் மாற்ற முடியும் என்ற வரிக்கதைதான் இந்த 'ராட்சசி'
கே.புதூர் என்ற ஒரு சின்ன கிராமத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பை ஏற்கிறார் கீதாராணி (ஜோதிகா). உதவி தலைமை ஆசிரியர் உள்பட பொறுப்பற்ற ஆசிரியர், ஆசிரியைகள், சிகரெட் பீடி பழக்கமுள்ள, ஜாதி பெயரால் சண்டை போடும் மாணவர்கள் என ஒழுங்கீனமற்று இருக்கும் பள்ளியை சீர்திருத்த படிப்படியாக ஜோதிகா எடுக்கும் நடவடிக்கைகள் தான் இந்த படத்தின் கதை. அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்கள், முறைக்கும் மாணவர்கள், இடைஞ்சல் கொடுக்கும் தனியார் பள்ளி தாளாளர், அரசு அதிகாரிகள், போலீசார் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் இவை அனைத்தையும் தனி ஆளாக ஜோதிகா எதிர்த்து நின்று வெற்றி பெற்றாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியை வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஜோதிகா. ஜோதிகாவின் தேர்வே படத்தின் வெற்றியை பாதி உறுதி செய்துவிட்டது. வழக்கமான அலட்டல் நடிப்பு இல்லாமல் கேரக்டருக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை மட்டும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. படம் முழுவதும் உர்ரென கோபமான முகத்தோடு வந்தாலும் அப்பா மரணத்தின்போது கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை காண்பிப்பது, சிறுவன் ஒருவனிடம் திருமணம் உள்ளிட்ட விஷயங்களை பேசுவது, மாணவி ஒருவர் காதல் வயப்பட்டதாக கூறும்போது அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு 'புதையல்' கதையை கூறுவது என ஜோதிகாவின் நடிப்பு டாப் ரகம். பள்ளிக்குள் புகுந்து கலாட்டா செய்யும் ரெளடிகளை அசால்ட்டாக ஜோதிகா சமாளிக்கும் காட்சியில் நம்பகத்தன்மை இல்லையே? என நாம் யோசித்து கொண்டிருக்கும்போதே அதற்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் கொடுத்து இயக்குனர் அந்த காட்சிக்கான சரியான விளக்கத்தை கொடுத்து அசர வைத்துள்ளார்.
தனியார் பள்ளி தாளாளர் கேரக்டரில் ஹரீஷ் பெரடி கேரக்டர் கொஞ்சம் டம்மியாக உள்ளது. ஒரு அரசு பள்ளியை எதிர்க்க அவர் போடும் திட்டங்களும் மொக்கையாக உள்ளது. ஒரு உண்மையான தனியார் பள்ளி தாளாளர் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக சிந்திப்பார். இருப்பினும் அவரது நடிப்பு ஓகே. உதவி தலைமை ஆசிரியராக சிவராமன், பிடி மாஸ்டராக சத்யன் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் கேரக்டர்களை மெருகேற்றியுள்ளனர்.
பள்ளி ஆசிரியைகளில் ஒருவரான பூர்ணிமா பாக்யராஜ் கேரக்டருக்குள் ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்து, கிளைமாக்ஸில் அந்த சஸ்பென்ஸை உடைக்கும்போது ஒரு ஆச்சரியம் ஏற்படுகிறது. அதேபோல் ஜோதிகாவின் பின்னணி குறித்த பிளாஷ்பேக் காட்சியும் அருமை
சீன் ரோல்டான் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை கதைக்கு பொருத்தமாக இருப்பது படத்திற்கு பிளஸ். கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் ஒரு பள்ளியின் அனைத்து கோணங்களும் சிறப்பாக காண்பிக்கப்பட்டிருக்கின்றன. எடிட்டர் பிலோமின்ராஜ் கச்சிதமான பணியை செய்துள்ளார்.
இயக்குனர் கவுதம்ராஜ் முதல் படத்திலேயே ஒரு அருமையான கருத்துடன் ஆங்காங்கே ரசிக்கும் வகையான கமர்ஷியலையும் சேர்த்து படத்தை இயக்கியுள்ளார். அரசு பள்ளிகள் குறித்த மக்களின் கருத்தை ஆட்டோ டிரைவர் மூலம் பிரதிபலித்துள்ளார். நாட்டில் உள்ள ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் போலீஸ்காரர்களுக்கு வேலையே இருக்காது' போன்ற ஆழமான வசனங்கள் ஆங்காங்கே வந்து பார்வையாளர்களை நிமிர வைக்கின்றது. ஊரில் உள்ள அனைத்து கோவில்களும் அலங்காரமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அரசு மட்டுமல்ல, மக்களும் தான். கோவில்களுக்கு கொடுக்கும் நன்கொடையை ஏன் மக்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு தருவதில்லை? போன்ற சாட்டையடி கேள்விகளை கேட்டு மக்களை சிந்திக்க வைக்கின்றார் இயக்குனர். ஒன்பதாம் வகுப்பு பாஸ் ஆகாத மாணவர்களை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைப்பதால் எழும் சட்டச்சிக்கல்கள், அந்த சட்டச்சிக்கல்களை இயக்குனர் கையாண்ட விதம் சூப்பர். 'சாட்டை', 'அப்பா' போன்ற படங்களின் பாதிப்பு இருக்கும் என்ற சந்தேகம் வேண்டாம், இந்த படம் நிச்சயம் வேற பிரச்சனைகளை அலசியுள்ளது.
ஆசிரியர் பணி என்பது ஊதியத்திற்காக செய்யும் வேலை அல்ல, அதுவொரு சமூக பணி. ஒரு ஆசிரியர் சரியில்லை என்றால் அவரது வகுப்பில் இருந்துதான் கிரிமினல்கள் உருவாகின்றனர் என்ற கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த படத்தை ஒவ்வொரு ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்க்க வேண்டிய ஒரு படம்.
மொத்தத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திடும் ஒரு முயற்சிதான் இந்த ராட்சசி.
Comments