நடிகை த்ரிஷாவை தொடர்ந்து நடிகை ராய் லட்சுமிக்குக் கிடைத்த கவுரவம்!
- IndiaGlitz, [Friday,January 14 2022]
தமிழ், இந்தி மொழி சினிமாக்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை ராய் லட்சுமி. இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் “தாம்தூம்“, “அரண்மனை“, “காஞ்சனா“, “மங்காத்தா“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான “சிண்ட்ரெல்லா“ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து துபாய்க்குச் சென்று தனது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடிவரும் இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து இருக்கிறது.
நடிகை ராய் லட்சுமி தனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019 இல் இருந்து பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கான், சஞ்சய் தத், போனிகபூர் ஆகியோர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.
மலையாள சினிமாவில் மம்முட்டி, துல்கர் சல்மான், மோகன்லால், டோவினோ தாமஸ், நடிகை மீரா ஜாஸ்மீன் ஆகியோர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். தமிழில் சமீபத்தில் நடிகர் பார்த்திபன், நடிகை த்ரிஷா, அமலாபால் ஆகியோரைத் தொடர்ந்து நடிகை ராய் லட்சுமிக்கு இந்த கவுரவம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.