ஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Saturday,January 23 2021] Sports News
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இந்தப் போட்டியில் இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்ட இந்திய அணி 33 ஆண்டுகால வரலாற்று சாதனையை படைத்தது. அதனால் இந்த டீமை பார்த்து மிரண்டு போய்விட்டதாகப் பல கிரிக்கெட் ஜாம்பவான்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இளம் வீரர்கள் நடராஜ் தங்கராசு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது சிராஜ் நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். அதில் நடராஜன் ஆட்டத்தின் துவக்கத்திலேய ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். இதனால் கேப்டன் ரஹானே வெற்றிக் கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்ததும் நமக்குத் தெரியும்.
ஆனால் இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கு பதிலாக களம் இறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனையை சந்தித்து இருக்கிறார். இவர் அடிப்படையில் மிக உயரமான மனிதர். திடீரென 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். இந்நிலையில் விளையாட்டின் போது காலில் கட்டிக் கொள்ளும் ஒரு ஜோடி பேட் இல்லாமல் இவர் தவித்து இருக்கிறார்.
மற்ற வீரர்கள் அணியும் பேட் சுந்தருக்கு பத்தாது ஆகையால் போட்டி நேரத்தில் அவரது பயிற்சி குழுவும் கடும் பதற்றம் அடைந்து இருக்கிறது. இதனால் போட்டி நடைபெற இருந்த அன்று பயிற்சிக் குழுவை சேர்ந்த சிலர் ஆஸ்திரேலிய சாலைகளில் அலைந்து இவருக்கு பொருந்தும் வகையில் கால் பேடை தேடி அலைந்ததாகத் தற்போது தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் சுந்தருக்கு ஏற்ற சைஸ் கிடைக்காமல் அவர்கள் பல கடைகள் ஏறி இறங்கியதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதனால் கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வரும் வரை ஒட்டுமொத்த டீமும் பதற்றத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளனர். ஒருவழியாக சுந்தருக்கு ஏற்ற சைசில் ஒரு ஜோடி பேடைக் கண்டுபிடித்ததாக அந்தப் பயிற்சி குழு தெரிவித்து உள்ளது. இந்தத் தகவல் வெளியானதும் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.