சினிமா என்றால் ரஜினி, கமல், ராஜமெளலி மட்டும் தானா? ஆர்.கே.செல்வமணி ஆவேசம்
- IndiaGlitz, [Sunday,May 21 2017]
மத்திய அரசு சமீபத்தில் திரையுலகிற்கும் ஜி.எஸ்.டி. வரி பொருந்தும் என அறிவித்துள்ளதால் திரையரங்குகளின் டிக்கெட் விலையின் மீது 28% வரிவிதிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இந்த வரிவிதிப்பிற்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே திரைத்துறை ஆன்லைன் பைரஸி, திருட்டு டிவிடி உள்பட பல பிரச்சனைகளால் தள்ளாடி வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களின் இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு திரையுலகை அடியோடு சாய்க்கும் வகையில் உள்ளது.
திருட்டு டிவிடி உள்பட திரையுலகில் உள்ள எந்த பிரச்சனைக்கும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு உச்சகட்ட வரிவிதிப்பை மட்டும் விதிப்பது திரையுலகை அடியோடு நசுக்கும் நடவடிக்கை ஆகும். சினிமா என்றல் ரஜினி, கமல், ராஜமெளலி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என்று மட்டும் நினைத்து கொள்ளாமல் தினம் தினம் பிழைப்புக்காக அல்லாடி கொண்டிருக்கும் 95% தொழிலாளிகளை அரசாங்கம் உணர வேண்டும்
திரைப்பட தொழிலாளர்கள், திரையரங்க தொழிலாளர்கள் என தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இந்த வரிவிதிப்பு உள்ளது. திரைத்துறையை ஒரு தொழிலாக மட்டும் அரசு நினைக்காமல் இதை ஒரு கலை என்ற கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டி மத்திய அரசு வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
மேலும் தற்போது விஷால் தலைமையிலான தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அபிராமி ராமநாதன் தலைமையிலன தமிழ் திரைபப்ட வர்த்தக சபை, விநியோகிஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்கள் தலைமையில் இன்னொரு அணி என மூன்று அணிகளாக பிரிந்து நம்மை நாமே பலவீனப்படுத்தி கொள்ளக்கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். ஒன்றுபட்டு தமிழ்த்திரையுலகையும் நமது தொழிலாளர்களின் வாழ்க்கையையும் பாதுகாப்போம்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.