பணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் நடந்த நல்ல விஷயங்கள்
- IndiaGlitz, [Wednesday,April 19 2017]
சென்னை ஆர்.கே.நகரில் அதிகளவிலான பணப்பட்டுவாடா நடந்த காரணத்தால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்தல் ரத்து காரணமாக அரசியல்வாதிகள் ஏமாற்றம் அடைந்திருக்கலாம், ஆனால் அந்த பகுதி மக்களுக்கு இந்த தேர்தல் ஒரு தீபாவளி, பொங்கல் போலவே இருந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ரூ.4000 பணப்பட்டுவாடா முடிந்துவிட்டதாகவும், இந்த 4000 ரூபாய் வெறும் அட்வான்ஸ்தான் என்றும் தேர்தலுக்கு முந்தைய நாள் ஓட்டுக்கு ஒன்றுக்கு ரூ.10000 கொடுக்கவுள்ளதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றும் முன்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆர்.கே.நகர் மக்கள் புத்திசாலிகள் என்பதை ஒரு விஷயத்தில் நிரூபித்துள்ளனர். இந்த பகுதி மக்களின் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பதால் அவ்வப்போது அவசர செலவுக்கு அந்த பகுதியில் உள்ள மார்வாடி கடைகளில் தங்களின் நகைகளை அடகு வைப்பதுண்டு. இந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக அடகு வைக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என்பது ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது.
மார்வாடிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரே நாளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வந்து புதிய ரூ.2000 நோட்டை கொண்டு வந்து கொடுத்துவிட்டு தங்களுடைய நகைகளை மீட்டு சென்றனர். மேலும் நகைகளை அடகு வைக்காத பொதுமக்கள் வாக்குக்கு கிடைத்த பணத்தில் தங்கக்காசு, கொலுசு, கம்மல் மற்றும் மூக்குத்தி என புதிய நகைகளை வாங்கியுள்ளனர்.
எனவே ஓட்டுக்கு கொடுத்த காசை டாஸ்மாக் கடைக்கு சென்று வீணாக்காமல் கடனை அடைக்கவும், முதலீடாக புதிய நகைகளை மக்கள் வாங்கிக்குவித்தது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை தேர்தல் திட்டமிட்டபடி நடந்திருந்தால், நகை பிசினஸ் இன்னும் இருமடங்காகியிருக்கும் என்று கூறப்படுகிறது.