தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல்.
- IndiaGlitz, [Wednesday,April 05 2017]
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு அந்த தொகுதியின் வெற்றி வேட்பாளரை மட்டும் முடிவு செய்ய போவதில்லை என்றும் தமிழகத்தின் தலையெழுத்தையே முடிவு செய்ய போவதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த தேர்தலின் முடிவில் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன், தீபா ஆகிய மூவரின் அரசியல் எதிர்காலமே உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டு மாத காலம் ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து நல்லாட்சி கொடுத்து வந்தார். வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டு பிரச்சனைகளை அவர் எதிர்கொண்ட விதம் அனைவரின் பாராட்டுக்களை பெற்றது.
இந்தநிலையில் திடீரென முதல்வர் பதவியின் மீதுள்ள ஆசை காரணமாக சசிகலா, ஓபிஎஸ் அவர்களை திடீரென ராஜினாமா செய்ய வற்புறுத்தி முதல்வர் பதவியை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் திடீரென வந்த சொத்துக்குவிப்பு வழக்கு அவரை கோட்டைக்கு செல்வதற்கு பதில் சிறைக்கு தள்ளியது.
இந்த நிலையில் நான்கரை வருட ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக 122 எம்.எல்.ஏக்கள் வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் ஓபிஎஸ்-க்கு ஒரு சசிகலா போல, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு தினகரன் திடீரென தோன்றியதால், கட்சியும் ஆட்சியும் தற்போது தினகரன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் அவர் அடுத்த நிமிடமே முதல்வர் ஆகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட மூத்த அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த நிலை மாறவும் தினகரனை கட்சியில் இருந்து அப்புறப்படுத்தவும் இருக்கும் ஒரே வழி மீண்டும் ஓபிஎஸ் அணி இணைவது ஒன்றுதான் என சீனியர் அதிமுக தலைவர்கள் ஆலோசனை கூறி வருகின்றார்களாம். எனவே எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் தரப்பில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் இரு அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பின்னர் மன்னார்குடி கும்பலின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இணைப்பு நடந்தால் அதிமுகவின் கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னமும் காப்பாற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே வரும் 15ஆம் தேதிக்கு பின்னர் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.