ஓய்வு பெற்றிருப்பேன்… எனது கம்பேக்கிற்கு இவர்தான் காரணம்… மனம்திறந்த அஸ்வின்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராகவும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் வலம்வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், நான் 2018 ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்து இருப்பேன். ஆனால் எனது மனைவியின் ஆதரவும் தந்தையின் உறுதுணையும் தான் என்னை மீண்டும் கம்பேக் கொடுக்க வைத்திருக்கிறது என மனம் உருகிப்பேசியுள்ளார்.

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்தார். அதுவும் கடந்த 2019க்கு பிறகு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இதற்கு கேப்டன் கோலிதான் காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த தருணத்தில் பல வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அணிக்கு பல முறை வெற்றியை பெற்றுக்கொடுத்த என்னுடைய வலியை யாரும் புரிந்துகொள்ளவே இல்லை. அந்த தருணங்களில் நான் மனம் திறந்து பேசும் ஒரே நபர் எனது மனைவி மட்டுமே. மேலும் என்னுடைய அப்பா ஒருமுறை “உயிரிழப்பதற்குள் நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதை நிச்சயம் பார்ப்பேன்“ என்று தெரிவித்து இருந்தார். இந்த வார்த்தைதான் நான் ஓய்வு அறிவிப்பதை தடுத்து நிறுத்தியது எனத் தற்போது அஸ்வின் நினைவுகூர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்புப் பெற்ற ரவிச்சிந்திரன் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை அசர வைத்தார். தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய இவர் தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றுள்ளார்.