ஒருநாள், டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து… மனம் திறக்கும் அஸ்வின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறைந்த பட்ச ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இடம் பெற்றார். அதற்குபிறகு அவர் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறவே இல்லை. இதுகுறித்து இந்தியா டூடே பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள அஸ்வின் “தான் ஒதுக்கப்படுவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் நிம்மதியாக இருப்பதற்கான வழிமுறைகளை கண்டு கொண்டுள்ளேன்“ எனவும் தெரிவித்து உள்ளார். இந்தக் கருத்து ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் எப்படி இந்தப் போட்டிகளில் இருந்து ஒதுக்கப்பட்டார் என்பதே பலருக்கும் தற்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிற்காக 111 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்ட அஸ்வின் இதுவரை 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதிலும் 25 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது பெரிதும் கவனம் பெற்றது. அதேபோல 10 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அஸ்வினின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவிற்காக இதுவரை 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவருடைய சராசரி 22.94 ஆகவும் சிக்கன விகிதம் 6.97 ஆகவும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜுலை 9, 2017 ஆம் ஆண்டு கடைசியாக டி20 போட்டியில் அஸ்வின் விளையாடினார். பின்னர் சாஹல், குல்தீப் போன்றோரின் வருகையால் ஜடேஜா, அஸ்வின் விலக்கப்பட்டனர். பின்னர் ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் இடம்பெற முடிந்தது.
ஆனால் அஸ்வினால் இதுவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கேப்டன் விராட் கோலி, “வாஷிங்டன் சுந்தர் அணிக்கு வேண்டியதைச் செய்யும்போது அஸ்வினை எங்கு நுழைக்க முடியும் என்று நீங்களே சொல்லுங்க” எனக் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments