Pyaar Prema Kaadhal Review
பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண், ரைசா நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசை மழையில் இன்று வெளியாகியிருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. 'விஸ்வரூபம் 2' போன்ற பெரிய படத்துடன் களமிறங்கியதில் இருந்தே இந்த படத்தின் மீது படக்குழுவினர்கள் வைத்திருந்த நம்பிக்கை தெரிகிறது. அந்த நம்பிக்கை ரசிகர்களுக்கும் ஏற்பட்டதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
பக்கத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் ரைசாவை மனதிற்குள் காதலிக்கின்றார் ஹரிஷ் கல்யாண். ஒரு கட்டத்தில் ரைசா, திடீரென ஹரிஷ் அலுவலகத்தில் அதுவும் அவருடைய பக்கத்து சீட்டுக்கு வேலைக்கு வருகிறார். இருவருக்கும் அறிமுகமாகி, நட்பாகி அதற்கு அடுத்தகட்டமாக மேட்டரும் முடிந்துவிடுகிறது. அப்போதுதான் ஹரிஷ் தனது காதலை சொல்கிறார். அதற்கு ரைசா கூறிய பதில் ஹரிஷூக்கு அதிர்ச்சி அளிக்கின்றது. அதன்பின்னர் இருவருக்கும் இடையே சின்னச்சின்ன ஊடல்கள், ஈகோக்கள், பாச மழைகள், ரொமான்ஸ் கவிதை காட்சிகள் என நீண்டு, கடைசியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தில் முடிகிறது இந்த படத்தின் கதை.
அரவிந்த்சாமிக்கு பின்னர் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ரொமாண்டிக் ஹீரோ கிடைத்துவிட்டார். ரொமான்ஸ் மட்டுமின்றி கோபம், பாசம், காமெடி என பின்னி எடுக்கின்றார் ஹரிஷ். குறிப்பாக 'அம்மாவா? நீயா? என்ற கேள்வி வந்தால் எனக்கு அம்மாதான் முக்கியம்' என்று கூறுமிடம் சூப்பர். அதேபோல் யாருக்குமே தெரியாத ரைசாவின் பிறந்த நாளை தேடிக்கண்டுபிடித்து அதை சொல்லும் பாணியில் ஒரு அனுபவமூள்ள நடிகரின் நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டலை பெறுகிறார் ஹரிஷ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த ரைசாவுக்கும் இந்த படத்தின் ரைசாவுக்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள். குளோசப் காட்சிகளில் கொஞ்சம் நெருடல் இருந்தாலும் நடிப்பில் தன்னால் முடிந்தவரை பெஸ்ட்டை கொடுத்துள்ளார்.
ஆனந்த்பாபு நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ரைசாவின் தந்தை கேரக்டரில் நடித்திருக்கும் ஆனந்த்பாபு ரைசாவின் மனதை மாற்றும் காட்சியில் அவரது தந்தை நாகேஷை ஞாபகப்படுத்துகிறார். ரேகா, முனிஷ்காந்த் ஆகியோர் கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.
படத்தின் முதுகெலும்பே இசைதான். 12 பாடல்கள் இருந்தாலும் அத்தனை பாடல்களும் படத்தின் காட்சிகளுக்கு பொருந்தும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் கம்போஸ் செய்திருப்பது யுவனின் சிறப்பு. அதேபோல் பின்னணி இசை மிக அருமை.
இயக்குனர் இளன், இது இளைஞர்களுக்கான படம் என்பதை முடிவு செய்தது மட்டுமின்றி சொல்ல வந்த விஷயத்தை மிகச்சரியாக கிளைமாக்ஸில் சொல்லிவிட்டார். அதற்கே அவருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள். கல்யாணம் என்பது வெறும் வார்த்தை அல்ல, இரு மனங்கள் இணைந்தால் மட்டுமே கல்யாணம் என்பதை இதைவிட அழுத்தமாக கூறமுடியாது. லிவிங் ரிலேஷன்ஷிப்பை நியாயப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்திருப்பது, பெற்றோரின் திருப்திக்காக வாழ்வதை விட்டுவிட்டு தனக்காக வாழ்வது சுயநலமல்ல என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றார். இளைஞர்களை கவரும் வகையில் பெரும்பாலான காட்சிகள் இருப்பதும், இன்றைய இளைஞர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வசனங்களை படத்தில் வைத்திருப்பதும் படத்தின் மிகப்பெரிய பலம். பல தமிழ்ப்படங்களில் பார்த்த சொதப்பாலான கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருந்த படம், திடீரென ஏற்பட்ட திருப்பத்தால் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துவிட்டார் இயக்குனர் இளன்.
மொத்தத்தில் இளையதலைமுறையினர்களுக்கு ஒரு இனிக்கும் காதல் படம்.
- Read in English