Download App

Puriyatha Puthir Review

விஜய் சேதுபதியின் ஆரம்ப கால படம் மெல்லிசையாக தொடங்கி பல இன்னல்களை சந்தித்து கடைசியில் குத்துயிரும் குலையுயிருமாக வந்திருக்கும் இந்த புரியாத புதிர் அவரின் ரசிகர்களை எந்தளவுக்கு திருப்தி படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் மிக பெரிய அடுக்கு மாடி குடியிருப்பின் மேலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். பின்னர் சினிமா இசையமைப்பாளர் கதிர்(விஜய்சேதுபதி) பார்ட் டைமாக வேலை செய்யும் இசைக்கருவிகள் விற்கும் கடைக்கு வயலின் வாங்க வரும் மீரா (காயத்ரீ) மீது காதல் கொள்கிறார். அவரும் இவரை சீக்கிரமே ஏற்று கொள்ள காதலர்கள் ஆகின்றனர். அதன் பிறகு ஒன்றின் பின் ஒன்றாக கதிர் வாழ்க்கையில் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அவன் நண்பர் ஒருவன் யாரோ விஷமி முகநூலில் அந்தரங்க போட்டோவை போடா தற்கொலை செய்துகொள்கிறான். இன்னொரு நண்பனும் (அர்ஜுனன்) அதே மர்ம நபர் மூலம் போதை மருந்து கடத்தலில் மாட்டிவிட படுகிறான். மர்ம நபர் கதிரின் செல்லுக்கு மீராவின்அந்தரங்க படங்களையும் அனுப்புகிறான். கதிர் பைத்தியம் பிடித்தவனாகி யார் தன்னையும் தன காதலியையும் தொந்தரவு செய்வது என்று தெரியாமல் திரிய கிளைமாக்ஸில் அவருக்கும் நமுக்கும் சஸ்பென்ஸ் உடைகிறது.

இன்னும் இளமையாக அழகாக தெரியும் ஆரம்ப கால விஜய் சேதுபதி வழக்கம் போல் கொடுத்த வேலையை கச்சிதமாக அனைத்து  காட்சிகளிலும் செய்து முடிக்கிறார். அவரின் துரதிஷ்டம் அரைவேக்காடாக எழுதப்பட்ட அவர் கதாபாத்திரம் நம்மை ஒன்ற விடாமல் தடுக்கிறது. கதையை தாண்டி சேதுபதி பல படங்களில் நிற்பது போல இதில் அவரால் தனி முத்திரை பாதிக்க முடியவில்லை. காயத்ரிக்கு இதில் நல்ல பாத்திரம் கிடைத்திருக்கிறது அவரும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார். அப்பாவி பக்கத்துக்கு வீட்டு பெண் போல் இருக்கும் அவரது தோற்றம் மீராவுக்கு அழகாக பொருந்திவிடுகிறது. பாடல் காட்சிகளில் விஜய் சேதுபதியுடன் நல்ல நெருக்கம் இளசுகளை கவரும். காமெடியன் அர்ஜுனன் சற்றே சீரியஸ் ஆன நெகடிவ் கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு திருப்புமுனையாக ஆனால் திணிக்கப்பட்ட பாத்திரத்தில் ரமேஷ் திலக் நாம் அடையாளம் கண்டு பிடிக்கும் முன்னரே காணாமல் போகிறார். மஹிமா நம்பியாருக்கு கதையின் ஆணிவேர் கேரக்டர் ஆனால் அவரை வலுவில்லாத திரைக்கதை சோபிக்க விட வில்லை.

படத்தில் பிளஸ் என்று பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் கண்ணை உறுத்தாமல் அழகான ஒளிப்பதிவு அதற்க்கேற்றார்போல கலை இயக்கம் ஜோர். இயக்குனர் இந்த டிஜிட்டல் காலத்திற்கேற்ப ஒரு நல்ல கருத்தையும் சொல்ல முற்பட்டுள்ளார் கதையில் முக்கியமான சஸ்பென்சும் கடைசிவரை காப்பாற்றப்பட்டது படத்தின் பல கொட்டாவி காட்சிகளை தாங்கி கொள்ள வழி வகுக்கிறது.

புரியாத புதிரின் மிக பெரிய பலவீனம் காயத்ரி தவிர மற்றவர்களின் வலுவற்ற கதாபாத்திரங்கள். ஹீரோ ஹீரோயினுக்குள் இருக்கும் உறவு மற்றும் ஹீரோ அவர் நண்பர்களுக்குள் இருக்கும் உறவு அரை வேர்க்காடாக சொல்லப்பட்டதினால் கதையின் பின் பாதியில் அவர்களுக்குள் நேரும் அசம்பாவிதங்கள் நம்மை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை. பாடல்கள் இனிமையாக இருந்தும் அவை தப்பு தப்பான இடங்களில் புகுத்தியதால் அலுப்புதான் வருகிறது. ஓரளவுக்கு காப்பாற்ற பட்ட சஸ்பென்ஸை கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத வகையில் உடைத்து பெரும் ஏமாற்றம். அதனாலேயே மஹிமாவின் கதாபாத்திரமும் அவுட். எல்லா காட்சிகளிலும் அதிக பட்சம் இருவர் மட்டுமே இருப்பது மேலும் அலுப்பு. ஒரு குறும்படத்த்தை ஜவ்வாக இழுத்த உணர்வே படம் முடியும் போது ஏற்படுகிறது.
 
இந்த படம் தான் விக்ரம் வேதா வில் அசத்திய சாம் சி எஸின் முதல் முயற்சி என்ற வகையில் அவரின் திறமையை நன்றாக பயன்படுத்தி பாடல்களை கேட்கும்படி தந்திருக்கிறார். திரைக்கதையில் கோட்டை விட்ட பல காட்சிகளில் உணர்ச்சி போங்க பின்னணி இசை கொடுத்து சாம் ஓரளவுக்கு காப்பாற்றிவிடுகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு கச்சிதம். அதே போல் எடிட்டர் பவன் ஸ்ரீகுமாரும் முடிந்தளவு உழைத்திருக்கிறார். தயாரிப்பாளர் ரெபெல் பிலிம்ஸ் மற்றும் ஜெ எஸ் கே சதிஷ் ஆகியோர் மிக சிரம பட்டு இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். படம் பல வித இன்னல்களை ஆரம்பம் முதலே சந்தித்ததால் ரஞ்சித் ஜெயக்கொடி பெரும் பழியில் இருந்து தப்பித்து கொள்வார் அடுத்து ஒரு நல்ல படத்தை கொடுப்பார் என்று நம்புவோமாக.

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பு சாம் சி எஸின் இசைக்காக பார்க்கலாம்.

Rating : 2.0 / 5.0