Download App

Puppy Review

பப்பி  -   பொழுதுபோக்குடன்  நல்ல கருத்து 

முரட்டு சிங்கிள் என்கிற புனை பெயருடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் நட்டு தேவ் பப்பியை அடல்ட் காமடி வகை படம் போல விளம்பரப்படுத்தியிருந்தாலும் தேட்டருக்கு செல்லும் ரசிகனுக்கு பொழுது போக்கும் அம்சங்களுடன் ஒரு நல்ல செய்தியையும் சொல்லி ஆச்சரியப்படுத்தியிருகிறார். 

பிரபு (வருண்) கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து ஊதாரி பையன். வகுப்பறையில் பலான படம் பார்க்க போய் கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய படுகிறார். வாலிப மயக்கத்தில் எப்படியாவது கட்டில் சுகம் அனுபவிக்க வேண்டும் என்று அலையும் பிரபு நண்பன் சீனியர் (யோகி பாபுவின்) துணையோடு விலை மாதுக்ககளிடம் செல்கிறார் ஆனால் அங்கே அவர் நினைப்பது நடக்காமல் வேறு நகைச்சுவை சம்பவங்களே அரங்கேறுகின்றன. பிரபு ஆசையாக வீட்டில் வளர்க்கும் லாபரடோர் நாய் பப்பி கர்ப்பம் அடைகிறது. அதே சமையம் கதாநாயகனின் வீட்டு மாடிக்கு குடி வருகிறாள் இளம் பெண் ரம்யா.   இருவருக்கும் நட்பாக பின் ஒரு கட்டத்தில் எல்லை மீறுகிறார்கள். ரம்யா கற்பமானதாக நம்பும் பிரபு அதை கலைக்க நினைக்கிறான். அதற்கு பிறகு என்ன ஆகிறது கர்ப்பம் கலைந்ததா இல்லை வாழ்க்கையின் சில படிப்பினை அந்த இளசுகளுக்கு பப்பி மூலம் கிடைத்ததா என்பதே மீதி கதை.

வருண், நாம் பக்கத்து வீட்டில் பார்க்கும் சாதாரண ஊதாரி இளைஞனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். யோகி பாபுவுடன் அடிக்கும் காமடி லூட்டி சம்யுக்த ஹெக்டேவுடன் காதல் பப்பியிடம் அன்பு பெற்றோருடன் எதார்த்தம் என்று அத் தனை உணர்வுகளையும் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் வருண். க்ளைமாக்சில் பப்பியை காப்பாற்ற வருண் பதைபதைப்புடன் நன்றாக நடித்தாலும் கொஞ்சம் காட்டு காத்து கத்தி காதுகளை பதம் பார்க்கிறார் என்பதும் நிஜம். சம்யுக்தா நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண இளம் பெண்ணை கச்சிதமாக கண் முன்னாள் நிறுத்துகிறார். சாப்பாடு பிரியையாக எச்சில் ஊற விவரிப்பதும் வாலிப ஈர்ப்பில் மெல்ல வருணிடம் விழுவதும் பின் கடைசியில் கருவை பற்றி ஒரு முடிவு எடுக்கும் இடம் என்று அனைத்திலும் முத்திரை பதிக்கிறார்.  யோகி பாபுவின் சமீபத்திய படங்களில் ஏற்பட்ட காமடி வறட்சியிலிருந்து மீண்டு இதில் நிறையவே சிரிக்க வைக்கிறார்.  கால்பந்து விளையாட முடியாமல் பணக்கார பையன்களுக்கு பந்து பொருக்கி போட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும் தருணங்களில் நெகிழவும் வைக்கிறார். மாரிமுத்து, நித்யா,  சிவாஜி போன்ற சீனியர்கள் துணை கதாபாத்திரங்களில் மிளிர்கிறார்கள். 

பப்பியின் பெரிய பலம் இளமை துள்ளலுடன் வடிவமைக்க பட்ட கதையோட்டம் மற்றும் திரைக்கதை. ஆரம்பத்தில் ஆபாச காமடி தலை தூக்கினாலும் போக போக வேறு தடத்துக்கு மாறி ஒரு நல்ல சிந்தனையை விதைக்க பார்க்கிறது இந்த பப்பி. வருண் தன் அப்பா வீட்டிலிருப்பது தெரியாமல் சம்யுக்தாவுடன் சரசமாட முயற்சிக்கும் காட்சி மற்றும் யோகி பாபுவுக்கு ஹார்ட் அட்டாக் என்று பொய் சொல்லி ஊரை கூடும் இடம் வயிறை பதம் பார்க்கிறது. பப்பி நாயின் கற்பதையும் கதாநாயகியின் கற்பதையும் ஒப்பிட்டு கூறும் கருத்து நிச்சயம் பாராட்ட பட வேண்டிய ஒன்று. படத்தில் அதிகமாக எங்கும் தொய்வில்லாமல் நகர்வது ஆக பெரிய பிளஸ். 

மைனஸ் என்று பார்த்தால் முதன்மை பெண் பாத்திரத்தை பின் தாக்கியதாகவும் வெறுமனே கதாநாயகனின் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்வதாகவும் சித்தரித்திருப்பது. வருண் பாத்திரம் அந்த கற்பதால் படும் அவஸ்தையை காட்டிய அளவுக்கு அந்த பெண்ணனுக்கு காட்சிகள் போதை வில்லை என்று தோன்றுகிறது. கடைசியில் அவள் எடுக்கும் முடிவு அவ்வளவு ஆழமாகவும் இல்லை. திரைக்கதை நகர்வில் ஒரு நேர்த்தி இல்லாமல் காட்சிகள் தொக்கி நிற்கும் உணர்வும் ஏற்படுவது உண்மை. 

பப்பிக்கு மிக பெரிய தூணாக விளங்கியிருப்பவர் இசையமைப்பாளர் தரண் குமார். பட ஓட்டத்துக்கு கச்சிதமான பின்னணி தாளம் போட வைக்கும் வேக பாடல்கள் மற்றும் மனமுருகும் மெலோடி என்று அசத்தியிருக்கிறார். இது அவருக்கு ஒரு சிறந்த மறுபிரவேசம். சோத்து மூட்டை பாடல் படமாக்க பட்ட விதமும் வித்யாசம். தீபக் குமார் பதியின் காமிரா ரிச்சியின் எடிட்டிங் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் எல்லாமே சிறப்பு. எல் கே ஜி மற்றும் கோமாளி வரிசையில் ஹாட்ரிக்க்காக இந்த பப்பியும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெர் நேஷனல்க்கு ஒரு வெற்றி படம் என்பது நிச்சயம். முரட்டு சிங்கிள் என்கிற நட்டு தேவ் சாமார்த்தியமாக இளம் ரசிகர்களை உள்ளே இழுத்து அவர்களுக்கு வேண்டிய மசாலாக்களையும் கொடுத்து தான் சொல்ல வந்த நல்ல கருத்தையும் பதிவிட்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு நல் வரவாக தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். 

பப்பி தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய ஒரு நல்ல பொழுதுபோக்குடன் கூடிய கறுத்துள்ள படம். 

Rating : 3.0 / 5.0