ஹாக்கியில் பதக்கம் வென்ற 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு… அசத்தும் பஞ்சாப்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதனால் இந்தியா ஹாக்கி விளையாட்டில் 41 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பதக்கம் பெற்றுள்ளது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெறும் 6 அணிகளே கலந்து கொண்ட ஹாக்கிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

அதற்கு பிறகு தற்போது முதல் முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணியினர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 8 ஹாக்கி வீரர்களை சிறப்பிக்கும் விதமாக தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு மகிழ்ச்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

ஹாக்கிப் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி பெற்ற வெற்றியை ஒட்டுமொத்த இந்திய மக்களும் தற்போது சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில வீரர்களுக்கு தலா 1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் உள்பட 7 பேரை கவுரவிக்கவே இந்தப் பரிசு தொகை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.