ஆடு, மாடு, நாய் வளர்த்தால் வரி: முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,October 24 2017]
இந்தியாவில் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, வாட் வரி, அந்த வரி, இந்த வரி என மக்களை வரிகளால் உறிஞ்சி எடுத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் தற்போது வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கும் வரி கட்ட வேண்டும் என்ற புதிய முறை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வரி பஞ்சாப் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, பன்றி, ஆடு, மான் போன்ற விலங்குகளுக்கு வருடம் ரூ.250 வரியும், எருமை, காளை, ஒட்டகம், குதிரை, பசு, யானை போன்ற விலங்குகளுக்கு ரூ.500 வரியும் கட்ட வேண்டுமாம்.
ஒவ்வொரு விலங்கிற்கும் கோட் நம்பருடன் கூடிய சிப் பொருத்தப்படும் என்றும் அதன்படி ஒவ்வொரு ஆண்டும் வளர்க்கும் விலங்குகளுக்குரிய லைசென்ஸை புதுப்பித்துவிட்டு வரி கட்ட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வரி நாடு முழுவதும் விதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்று நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.