ஒரு கோடி சம்பளம்: விவசாய மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்
- IndiaGlitz, [Friday,April 05 2019]
இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லி கொண்டாலும் விவசாய குடும்பத்தை சேர்ந்த பலரே தங்கள் வாரிசுகளை டாக்டர், எஞ்சினியர் என்றுதான் படிக்க வைக்க ஆசைப்படுகின்றனர். விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பு படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் விவசாயம் குறித்த படிப்பு படித்த பஞ்சாபை சேர்ந்த ஒரு மாணவிக்கு கனடாவில் ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கவிதா என்ற மாணவி லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் முதுகலை விவசாயம் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கனடாவில் உள்ள monsanto canada என்ற நிறுவனம் கவிதாவின் திறமையை பார்த்து வியந்து தனது நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராகப் பணிபுரிய அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்கான சம்பளம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்.
இந்த பணி கிடைத்தது குறித்து கவிதா கூறியபோது, 'உயிரி தொழில்நுட்பத்தில் மான்சான்டோ லேட்டஸ்ட் டெக்னாலஜிகளைப் பயன்படுத்துவதில் உலகளவில் முன்னணியில் இருக்கிறது. அதனால், இந்த நிறுவனத்தில் பணிபுரிய நான் மிக ஆவலாக இருக்கிறேன். அடுத்த சில வருடங்களில் அவர்களுடைய அத்தனை உயிரி தொழில்நுட்பங்களையும் என்னால் முடிந்தவரை கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று கூறியுள்ளார்.
மேலும் விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பது முக்கியமல்ல. நல்ல தரமான கல்லூரி, பல்கலையில் படிக்க வேண்டும் என்பது மிக முக்கியம். கவிதா படித்த பல்கலைக்கழகமான 'லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக'த்தில் விவசாய மாணவர்களின் பிராக்டிகல் வகுப்புக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் 1000 ஏக்கர் நிலம் இருக்கிறதாம். இதுபோன்ற கட்டமைப்பு உள்ள கல்லூரியில் படித்தால் நிச்சயம் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்