புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது எப்படி?
- IndiaGlitz, [Monday,November 01 2021]
பொதுவாக கண் தானம் செய்யப்பட்டவர்களுடைய கண்கள் இருவருக்கு தானம் செய்யப்பட்டு அவர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் மரணமடைந்த புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது
மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் புனித் ராஜ்குமார் கண்கள் தானம் செய்து இருந்ததை அடுத்து அவரது கண்கள் நாராயண நேத்ராலயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக இருவருக்குத்தான் கண்கள் பொருத்த முடியும் என்ற நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர் புஜங்கஷெட்டி நான்கு பேருக்கு புனித்தின் கண்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பொருத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக 4 பேருக்கும் பார்வை கிடைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் நல்ல ஆரோக்கியமானதாக இருந்ததால் இரண்டு கண்களின் கார்னியா எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு முன்பகுதி விழிப்படலம் இரண்டு பேர்களுக்கும், பின்பகுதி விழிப்படலம் இரண்டு பேர்களுக்கும் என நான்கு பேர்களுக்கு பொருத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் என நான்கு இளைஞர்களுக்கு பார்வை கிடைத்துள்ளதாகவும் நால்வருமே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து நால்வருக்கும் தற்போது பார்வை திரும்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
கடந்த 2006ஆம் ஆண்டு புனித புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் இறந்தபோதும் அவரது மனைவி பர்வதம்மாள் இறந்தபோதும், அவர்களுடைய கண்களும் தானம் செய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.