கொரோனா தாக்கிய குழந்தையா? பெற்றோர்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்…
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா பாதித்த 7 வயது சிறுவனுக்கு ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ரோம் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய் அரியவகை என்றும் கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு உலகம் முழுவதும் இந்நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதித்த குழந்தைகளை இந்நோய் தாக்கும்போது பல உறுப்புகள் செயல்படாமல் போவதுடன் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மைக் கொண்டதாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நோயின் ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்தால் எளிதாக சிகிச்சையில் இதைச் சரிசெய்ய முடியும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு சைட்டோகைன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என மருத்துவ உலகம் எச்சரித்து இருந்தது. அதாவது குழந்தைகளை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் தாக்கியிருக்காது. இதனால் அந்நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலும் குழந்தைகளிடம் இருக்காது. மேலும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலமும் மிக வலுவாக இருக்கும். இந்நிலையில் திடீரென கொரோனா வைரஸ் அவர்களைத் தாக்கும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியைச் சுரந்து நுரையீரலில் கட்டிகளை உண்டாக்கி விடுகிறது. இதனால் குழந்தைகள் சுவாசிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும். இத்தகைய சிக்கலுக்கு சைட்டோகைன் என்று பெயர்.
கொரோனா விஷயத்தில் சைட்டோகைன் மட்டுமல்லாமல் மிக அரிதாக குழந்தைகளைப் பாதிக்கும் கவசாகி (வீக்கம், அழற்சி நோய்) போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக அமெரிக்க நோய் மற்றும் தடுப்பு மையம் கடுமையான எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த அரியவகை நோயானது அமெரிக்காவில் கொரோனா பாதித்த 5-18 வயது சிறுவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நோய் பாதிப்பினால் உடலில் பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்து விடுவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர். இந்நோயை Hyper Inflammatory syndrome என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டு இருந்தனர்.
மேலும் கவசாகி அழற்சி நோய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதித்த சிறுவர்களிடம் பரவலாகக் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. சென்னையில் ஒரு சிறுவன் இந்நோயால் பாதிக்கப்பட்ட செய்தியும் கடந்த மே மாதத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புனேவில் இந்நோய் தாக்கம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் இந்தியாவிலும் ஹைப்பர் இன்பிலமட்டரி சின்ரோம் நோய்க்குறித்து மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதாவது கொரோனா நோய்பாதிப்பினால் சிகிக்கை எடுத்துக் கொண்ட சிறுவர்களுக்கு நோய் குணமாகியும்கூட தீவிரக் காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற சிக்கல் இருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே கொரோனா பாதிப்பினால் சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுவர்கள் குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ உலகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout