'புலி' திரை விமர்சனம் - ரசிக்கத்தக்க ஃபேண்டசி படம்

  • IndiaGlitz, [Thursday,October 01 2015]

தமிழ் சினிமாவுக்கு ஃபேண்டசி ஜானர் புதிது. மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நட்சத்திர நடிகர் ஃபேண்டசி படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பே புலி' படத்தை அனைவரது கவனத்துக்கும் கொண்டு சென்றது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல சிக்கல்களைக் கடந்து வெளியாகியிருக்கும் புலி படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அசுர சக்தி கொண்டவர்களின் அரசாட்சியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பற்றும் ஐதர் காலக் கதைதான் 'புலி'. ஃபேண்டசியும் சில திருப்பங்களும் நிறைந்த திரைகக்தையைக் கொண்டு சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

மகாராணி யவன ராணி மற்றும் தளபதி ஜலதரங்கன் (சுதீப்) ஆகியோரால் அர்சாங்கத்துக்குக் கீழுள்ள எண்ணற்ற கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கிராமத்துக்கு குழந்தையாக வந்து சேரும் மருதீரன் (விஜய்) மக்களைக் அவர்களிடமிருந்து காப்பாற்றி நிம்மதி தேடித் தருவதுதான் கதை.

படத்தின் தொடக்கத்திலேயே ஃபேண்டசி கதைக்கான களத்தை அழுத்தமாகப் பதியவைத்துவிடுகிறார் இயக்குனர். விவரிக்கப்படும் முன்கதை, மருதீரன் சில விசேஷ குணாதிசயங்களுள்ள குழந்தையாக வந்து சேர்வது என. ஆனால் அதன் பிறகு தொடர்வது என்னவோ வழக்கமான காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள்தான். இடமும் கதாபாத்திரங்களின் உடைகளும்தான் வேறு. ஆனால் விஜய்யின் இருப்பும் ஆங்காங்கே தூவப்பட்டுள்ள ஃபேண்டசி சங்கதிகளும் ரசிக்க வைக்கின்றன.

இடைவேளிக்கு சில நிமிடங்களுக்கு முன் வேகமெடுக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியைப் பெரிதும் எதிர்பார்க்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் அந்த வேகம் பெருமளவில் தக்கவைக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஃபேண்டசி சங்கதிகளால் பல்வேறு ஆச்சரியத் தருணங்களும் இருக்கின்றன. ஆனால் வலுவற்ற ஃப்ளேஷ் பேக் காட்சிகள். இடைச்செறுகலாக வந்து செல்லும் பாடல்கள் மற்றும் தேவைக்கதிகமாக நீட்டிக்கப்பட்ட இறுதிக் காட்சிகள் ஆகியவை தாக்கத்தைக் குறைக்கின்றன.

ஒரு ஃபேண்டசி வகைப் படம் என்ற அளவில் புலி சோடை போகவில்லை. பிரம்மாண்ட செட்கள், மிகப் பெரிய விலங்குகள், பேசும் திறனுள்ள பறவைகள், அமானுஷ்ய சக்தி கொண்ட மனிதர்கள், குள்ள மனிதர்கள், ஒற்றைக் கண் மனிதன், கருஞ்சிறுத்தை சண்டை என பல்வேறு விஷயங்கள் ஃபேண்டசி ரசனைக்கு சரியான தீனி போடுகின்றன அதே நேரத்தில் ஃபேண்டசி வகைப் படம் என்பதால் லாஜிக்கை மறந்து மேஜிக்கை ரசிக்கும் மனநிலையுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடியும் என்பதையும் சொல்ல வேண்டும்.

விஜய் ஃபேண்டசி களத்துக்கு சிறப்பாகப் பொருந்தியிப்பதோடு தன்னிடம் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் நடனம், சண்டை, பஞ்ச் வசனங்கள் போன்றவற்றிலும் குறைவைக்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில் பல இடங்களில் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். படத்தில் மற்றொரு வேடமாக புலி வேந்தன் என்ற பாத்திரத்தில் தன் நடிப்புத் திறமையையும் வசன உச்சரிப்பையும் சரியாகப் பயன்படுத்துகிறார்.

படத்தில் விஜய்க்கு அடுத்து வலுவான பாத்திரம் ராணியாக வரும் ஸ்ரீதேவிக்கு. 28 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடித்திருக்கும் இந்த முன்னாள் கனவுக்கன்னி ஒரு துணிச்சல் மிக்க ராணியாக வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது., அதோடு சற்று எதிர்மறைத் தனமை கொண்ட பாத்திரத்தில் கிட்டத்தட்ட முதல்முறையாக நடித்திருப்பதோடு மேலும் சில ஆச்சரியங்களையும் இவரது பாத்திரம் உள்ளடக்கியிருப்பதைத் திரையில் பார்த்து ரசிக்கலாம்.

சுதீப்புக்கு வழக்கமான துரோகமும் வன்மமும் கலந்த வில்லன் பாத்திரம்தான் குறையின்றிச் செய்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருப்பது பாராட்டத்தக்கதுதான் என்றாலும் தமிழ் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அவர். ஹன்சிகா வழக்கமான அழகு இளவரசி. நடிக்க வேண்டிய இடங்களில் சரியான முகபாவங்களைத் தருகிறார். பிரபு, நரேன் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் சிறு பாத்திரங்களில் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையாவும் சத்யனும் சிரிக்க வைக்கத் தவறுகிறார்கள். ரோபா சங்கரும் இமான் அண்ணாச்சியும் ஆங்காங்கே சிரிப்புப் பட்டாசு கொளுத்துகிறார்கள்.

தொழில்நுட்பக் குழுவின் சிறப்பான உழைப்பால் படம் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. முத்துராஜின் கலை இயக்கத்தில் அந்த பிரம்மாண்ட அரண்மனை (உள்புறமும் வெளிப்புறமும்) வியக்கவைக்கிறது. நடராஜ் தன் ஒளிப்பதிவில் கடினமான புதிய கோணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். கண்ணுக்கு குளுமையாக காட்சிகளைப் பதிவுசெய்திருக்கிறார். கமலக்கண்ணன் தலைமையிலான கிராஃபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவின் பணியும் சிறப்பாக அமைந்திருக்கிறது சில காட்சிகளில் காட்சி நடக்கும் இடமும் பின்னால் தெரிபவையும் தனித் தனியாக படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தேவி ஸ்ரீபிரசாத்தின் பாடல்களில் ஏண்டி ஏண்டி' பாடல் மட்டுமே ரசிக்கவைக்கிறது. மற்றவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வந்து செல்வதோடு திரைக்கதையின் வேகத்தையும் குறைக்கின்றன. பின்னணி இசை பொருத்தமாக இருக்கிறது.

சிம்புதேவன் படத்தில் எதிர்பார்க்கப்படும் நகைச்சுவை இந்தப் படத்தில் மிகக் குறைவு. அவரது தனிச்சிறப்பான நக்கலும் எள்ளலும் சுத்தமாக இல்லை என்றே சொல்ல்விடலாம் சில சுவாரஸ்யமான கதாபாத்திரப் பெயர்களில் சிம்புதேவனின் வழக்கமான முத்திரை தெரிகிறது.

படத்தில் வசனங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. புதிய உலகத்தைப் படைத்திருக்கும் சிம்புதேவன் அதற்கேற்ற வசனங்களை யோசிக்கவில்லை. நம் அன்றாட பேச்சுப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளையும் சொற்றொடர் அமைப்புகளையும் கொண்ட வசனங்கள் சரியாகப் பொருந்தவில்லை. இரண்டாம் பாதியில் விஜய் ரசிகர்களுக்கான வசனங்கள் மட்டும் கவனத்தை ஈர்க்கின்றன.

இதுபோன்ற சில குறைகளும் ஏமாற்றங்களும் இருந்தாலும் இந்த ஃபேண்டசி படத்தை குடும்பத்துடன் கண்டு களிக்கலாம். குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். விஜய்யின் மாஸ் ரசனைக்கு ஏற்ற படமாகவும் அமைந்திருக்கிறது.

மதிப்பெண்- 2.75/5

More News

நடிகர் சங்க தேர்தல். சரத்குமார் மனுதாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் மனுதாக்கல் தொடங்கியது.....

'புலி' பட ரிலீஸை பட்டாசு வெடித்து கொண்டாடிய பிரபல பெண் தயாரிப்பாளர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் அனைத்து தடைகளையும் தாண்டி முதல்காட்சி அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.....

'புலி' அதிகாலை காட்சி ரத்து? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இன்றைய அதிகாலை 12 மணி காட்சி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி?

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த மூன்றாவது படமான 'இறைவி' ...

'வேதாளம்' படத்தின் மூலம் மீண்டும் அஜீத்துடன் இணைந்த பிரபலம்

அஜீத் நடித்த 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய படங்களில் அவர் மிகவும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் தோன்றியிருந்ததாக பல விமர்சனங்களில் நாம் பார்த்ததை மறந்திருக்க மாட்டோம்...