விஜய்யின் 'புலி'. ஒரு முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜய்யின் 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இதுவரை வெளியான விஜய்யின் 57 திரைப்படங்களுக்கும் 'புலி படத்திற்கு அதிக வித்தியாசம் உள்ளது. இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பெரும்பாலானவை விஜய்க்கு மட்டுமே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். பல படங்களில் ஹீரோயின் என்பது பெயரளவிற்கு பாடலுக்கும், ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். விஜய் என்ற ஒரே ஒரு மாஸ் போதும் என்ற வகையில்தான் பல விஜய் படங்கள் அமைந்துள்ளது.
ஆனால் முதல்முறையாக விஜய்க்கு சரிசமமாக 'புலி' படத்தில் பல கேரக்டர்கள் அமைந்துள்ளது. தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள ஸ்ரீதேவி, மற்றும் கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சுதீப் ஆகிய இருவருக்கும் கனமான பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படம், மற்ற விஜய் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் முதல்முறையாக விஜய்யுடன் இணைந்தது இந்த படத்தின் ஒரு பெரிய பலம். 'வேலாயுதம்' நாயகியும், தமிழில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகையுமான ஹன்சிகா முதல்முறையாக இளவரசி வேடத்தில் நடித்திருப்பதும் இந்த படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.
மேலும் இந்த படத்தில் நடித்துள்ள காமெடி நட்சத்திரங்களான ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா உள்பட அனைவருமே சித்திரக்குள்ளர்களாக நடித்துள்ளதால் இந்த படத்தில் காமெடி காட்சிகள் கலக்கலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 23ஆம் புலிகேசி படம் முழுவதையும் காமெடி காட்சிகளால் உருவாக்கியிருந்த சிம்புதேவன் சித்திரக்குள்ளர்கள் மூலம் கண்டிப்பாக ரசிக்கத்தக்க காமெடி காட்சிகளை உருவாக்கியிருப்பார் என்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த படத்தின் காமெடி காட்சிகள் கவரும் என நம்பலாம்.
அடுத்ததாக 'புலி' படத்தில் நடித்துள்ள விஜய் உள்பட முக்கிய நட்சத்திரங்களின் பங்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதே அளவுக்கு இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் பெரும் முக்கியத்துவம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. டீசர் மற்றும் டிரைலர்களை பார்க்கும்போதே கிராபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்டம், உலகத்தரம், ஆகியவை தெரியவந்துள்ளதால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்பது உண்மை. இதற்கு முன்னர் வெளிவந்த பாகுபலி'யின் வெற்றி கிராபிக்ஸ் காட்சிகளினால்தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளதை மனதில் வைத்து, கமலக்கண்ணன் குழுவினர் ஆற்றியிருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுத்தக்க வகையில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த 'வில்லு' படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ள தேவிஸ்ரீ பிரசாத், இந்த படத்திற்காக கம்போஸ் செய்துள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி ஏற்கனவே பட்டிதொட்டி முதல் எப்.எம் வானொலி வரை பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது இசைக்கு கவியரசு வைரமுத்து எழுதியுள்ள பாடல் வரிகள் இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான நட்டி நடராஜின் திறமையை பற்றி சொல்லவே வேண்டாம். அவரது ஒளிப்பதிவின் பிரமாண்டம் இரண்டு டிரைலர்களில் தெளிவாக தெரியவந்துள்ளது. இந்த படத்தில் இவர் ஆற்றியுள்ள பணியும் முக்கியத்துவமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் போன்ற படங்களை இயக்கிய சிம்புதேவனுக்கு உண்மையிலேயே இந்த படம் ஒரு பெரிய திருப்புமுனை படம் என்றால் அது மிகையாகாது. இந்த படத்திலேயே அவர் உச்சநிலையை அடையும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா,ஸ்ருதிஹாசன், பிரபு போன்ற ஒரு பெரிய நட்சத்திரங்களை ஒரே படத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் சமமான கேரக்டர்கள் கொடுத்து ஒரு படத்தை இயக்குவது என்பது பெரிய சவாலான பணி. இந்த பணியை எந்த நட்சத்திரங்களின் அதிருப்தியும் இல்லாமல் இயக்கியுள்ளதே ஒரு பெரிய சாதனை என்று தான் கூற வேண்டும்.
தமிழ் திரையுலகில் ஒருசில படங்கள் மட்டுமே ரூ.100 கோடி கிளப்பில் இணையும் நிலையில் இந்த படத்தையே ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து அதைவிட அதிகமாக வசூல் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்த படத்தை தயாரித்துள்ள பி.டி.செல்வகுமார், ஷிபுதமீன்ஸ் ஆகியோர்களின் நம்பிக்கையை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமின்றி தற்போது சீன, ஜப்பான் மொழிகளையும் சேர்த்து உலகம் முழுவதும் 3000 திரையரங்களில் வெளியிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படம் கண்டிப்பாக ஒரே வாரத்தில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கின்றது.
இன்னும் மூன்று நாட்களே ரிலீஸுக்கு உள்ள நிலையில் இந்த படம் 'பாகுபலி'யை போல மாபெரும் ஹிட் ஆகி ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு நமது சார்பிலும் அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments