விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி, 'புலி'க்கு நீதிமன்ற தடையா?
- IndiaGlitz, [Wednesday,September 23 2015]
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் செய்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் 'புலி' படத்தை தடை செய்ய கோரி மனு ஒன்றை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அன்புராஜசேகர் இயக்கிய குறும்படமான 'தாகபூமி' என்ற படத்தின் கதையை தழுவி 'கத்தி' படம் உருவாக்கப்பட்டதாகவும், இதற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 26ஆம் தேதி வரவுள்ள நிலையில் அன்புசேகர் புதிய மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள புலி படத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'புலி' திரைப்படம், இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு திட்டமிட்டபடி ரிலீஸாகும் என அனைவராலும் நம்பப்படுகிறது.