நண்பன், எந்திரன் படங்களுடன் கனெக்ஷன் ஆன 'புலி'

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகளில் இந்த படம் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் சிங்கப்பூர் நாட்டின் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான 'சுவாரா நெட்வொர்க்ஸ்' (Suara Networks) நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவதுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' மற்றும் விஜய் நடித்த 'நண்பன்' ஆகிய திரைப்படங்களை சிங்கப்பூரில் ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் அந்நாட்டில் 'புலி' திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிங்கப்பூரில் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய சுவாரா நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் 'புலி' திரைப்படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறியுள்ள இயக்குனர் சிம்புதேவன், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும், அனைத்து வயதினர்களும் ரசிக்கும்படி இந்த படம் இருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார். மேலும் 'புலி' படத்தையும் 'பாகுபலி' படத்தையும் ஒப்பிட வேண்டாம் என்றும் இரண்டும் வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.