புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி கவிழ்ந்தது!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வந்தனர். இதையொட்டி மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு ஆளுநர் முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். இதையொட்டி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போது காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்து இருக்கிறது.

ஆளுநரின் உத்தரவை ஒட்டி இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடியது. அதில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி பேசினார். அப்போது புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்குத் தொல்லை கொடுக்கப் பட்டதாகவும் நெருக்கடியை கடந்து ஆட்சியை நிறைவு செய்ததாகவும் தெரிவித்தார்.

அவரது உரையைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் முதல்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு தற்போது வெளியேறி உள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும் எதிர்க்கட்சிகள் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அம்மாநிலத்தில் ஆளுநர் பதவி வகித்த கிரண்பேடி அப்பதவியில் இருந்து விலகினார். இதனால் புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக தமிழிசை சௌந்திர பாண்டியன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த மாற்றத்தையொட்டி தற்போது ஆட்சி இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.