தமிழகத்தில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி...! அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே...!
- IndiaGlitz, [Sunday,June 20 2021]
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா தொற்று பரவியதன் அடிப்படையில், அரசு மாவட்டங்களை மூன்று வகைகளாக பிரித்துள்ளது. அந்த வகையில் 3-ஆவது இடத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்தை அனுமதித்துள்ளது தமிழக அரசு. கொரோனா 2-ஆம் பரவல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. சென்ற 10-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, தற்போது குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாமல், 23 மாவட்டங்களுக்கு மட்டுமே தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது வகையில் சேர்க்கப்பட்ட மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, குறிப்பிட்ட சில தளர்வுகளும், பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சரியான வழிமுறைகளை பின்பற்றி, 50% இருக்கைகளுடன் பயணிகள் பயணிக்க, குளிர்சாதன வசதி இல்லாமல் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கும் பொருந்தும்.
மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய இ-பதிவு தேவையில்லை.ஆட்டோவில் பயணம் செய்ய ஓட்டுநர் இல்லாமல் 2 பயணிகள் அனுமதிக்கப்படுவர். வாடகை டாக்சிகளில் பயணிக்க ஓட்டுநரை தவிர 3 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.