இந்தியாவிற்கு மீண்டும் வருகிறதா பப்ஜி கேம்???
- IndiaGlitz, [Thursday,November 12 2020]
பப்ஜி விளையாட முடியாமல் மண்டையை பிடித்து கொண்டு சுத்திய இந்திய இளைஞர்களுக்காவே பப்ஜி நிறுவனம் தனது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பப்ஜி நிறுவனம் “பப்ஜி மொபைல் இந்தியா” என்ற புதிய விளையாட்டை தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் பல சீன செயலிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் உலகம் முழுவதும் பல இளைஞர்களைக் கவர்ந்த பப்ஜி கேம். தற்போது அந்த நிறுவனம் இந்தியாவில் தனது தரவு பாதுகாப்பு மையத்தை நிறுவ உள்ளதால் மீண்டும் இந்தியாவில் பப்ஜி கேம் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
தென் கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் பப்ஜி கேமின் செல்போன் உரிமத்தை சீனாவைச் சேர்ந்த டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தது. இந்த நிறுவனம் வழங்கும் சேவையினால் இந்தியா போன்ற சில நாடுகளில் பப்ஜி கேமை விளையாட முடிகிறது. தற்போது இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நிறுவனம் தனது உரிமத்தை இழந்து இருக்கிறது. எனவே இந்தியாவின் தேச பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல்களை சேமித்து வைக்கும் தரவு சேமிப்பு அமைப்புகளை பப்ஜி நிறுவனம் புதிதாக அமைக்க திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் இந்தியர்களின் தரவு பாதுகாப்பு மற்றம் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்ய முடியும் எனவும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய பயனர்களுக்காக பப்ஜி நிறுவனம், “பப்ஜி மொபைல் இந்தியா” என்ற புதிய விளையாட்டை வடிவமைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. . இந்த புதிய பப்ஜி விளையாட்டுக்காக அந்நிறுவனம் ரூ.740 கோடி முதலீட்டை இந்தியாவில் செலவழிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பால் பப்ஜி பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.