ஆபாசமாக பேசியது தப்பா..ஜாமீன் கேட்ட பப்ஜி மதன்...! போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறையில் உள்ள குற்றவாளி மதனின் ஜாமீன் மனுவிற்கு, காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை, விபிஎன் முறையில் சட்டவிரோதமாக விளையாடி வந்தவர் தான் மதன். இதற்காக தனியாக யுடியூப் சேனல்கள் துவங்கி, அதில் ஆபாசமாக பெண்களிடம் பேசியும், சகப்போட்டியாளர்களிடம் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தியும் விளையாடி, அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். யுடியூப் சேனல் மூலமாக ஆபாச பேச்சுக்கள் பேசி சிறுவர்களை மூளைச்சலவை செய்ததாகவும், பெண்களிடம் அந்தரங்க பேச்சுக்கள் பேசி அத்துமீறி நடந்துகொண்டதாகவும் மதன் மீது ஆன்லைன் மூலம் 159 புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை மத்திய சைபர் கிரைம் காவல் துறையினர், மதனை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். மதன் தலைமறைவானதை தொடர்ந்து, இவனுடைய மனைவி கிருத்திகாவை கைது செய்து, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் முன்ஜாமீன் வேண்டி, மதன் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தான்.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மதன் சார்பாக வாதிட்ட நீதிபதி, "சக போட்டியாளர்கள் தான் புகார் அளித்துள்ளனர், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை என்று வாதிட்டார். ஆபாச பேச்சுக்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்தியும், சிறார்களை மூளைச்சலவை செய்துள்ளான். மதனின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறையினர் கூறினர். இதையடுத்து நீதிபதி தண்டபாணி, மதன் வழக்கறிஞரை பார்த்து "நீங்க வீடியோவை பார்த்தீங்களா...? ஆரம்பமே கேட்க முடியாத அளவிற்கு உள்ளது. அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு நாளை வந்து வாதிடுங்கள்" என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் அண்மையில் ஜாமீன் வழங்கக்கோரி கிருத்திகா சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், மதன் 11வது குற்றவியல் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தனர். கைக்குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு, கிருத்திகாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றம் மதனின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பப்ஜி மதன் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் தலைமையில் இன்று விசாரணை செய்யப்பட்டது. "பெண்களுக்கு எதிராக எந்த தவறும் செய்யவில்லை, அந்த குற்றங்களுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், 13 நாட்களாக மதன் சிறையில் இருப்பதாகவும், போலீசார் சார்பாக விசாரித்து விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அரசு தரப்பு வக்கீல் ஜாமீன் குறித்து போலீசாரிடமிருந்து விளக்கம் பெறவேண்டும் என்று கூறினார். இதன்பின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறையினர் தான் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு மாற்றி வைத்தார்.
மதன் கைதான சமயத்தில் "ஆபாசமாக போனில் பேசியது தப்பா ...?" என்று கேட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout