இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு அனுமதி… பழைய மாதிரியே இருக்குமா?
- IndiaGlitz, [Friday,May 19 2023]
ஆன்லைன் மொபைல் விளையாட்டுகளுள் ஒன்றான பப்ஜிக்கு மத்திய அரசு தடைவிதித்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
குறுகிய காலத்தில் பெரும்பாலான இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த பப்ஜி விளையாட்டை மத்திய அரசு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தடைசெய்தது. தென்கொரியா நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்திற்கு சொந்தனமான இந்த விளையாட்டை இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் விளையாடி வந்தனர். மேலும் இந்த விளையாட்டால் பல உயிர்சேதங்களும் அசம்பாவிதங்களும் நடைபெற்ற தகவல்களும் அவ்வபோது வெளியாகி வந்தன.
இந்நிலையில் இந்தியா – சீன எல்லைப் போரின்போது மத்திய அரசு பல்வேறு ஆன்லைன் விளையாட்டு தளங்களுக்கு இந்தியாவில் தடைவிதித்தது. அப்போது பப்ஜிக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்திய சட்டவிதிகளுக்கு ஏற்றபடி பப்ஜி விளையாட்டில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருப்பதாகவும் இந்தியாவில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்த கிராப்டன் நிறுவனம் தற்போது அனுமதி வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டினை கொண்டு வருவதற்காக கிராப்டன் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் பப்ஜி விளையாட்டை கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற புது பெயரில் அறிமுகப்படுத்துகின்றனர். ப்ளே ஸ்டோரில் நேரடியாக பிஜிஎம்ஐ டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம் என்றும் கூறப்படும் நிலையில் இளைஞர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.