பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் தற்கொலை: வேலைச்சுமை அதிகமா?
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் பிவி ராமானுஜம் என்பவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜார்கண்ட் மாநிலத்தில் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா என்ற பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் பிவி ராமானுஜம். இவரது வீட்டிலேயே அலுவலகம் இருப்பதால் தினமும் நள்ளிரவு வரை பணி செய்வது வழக்கம் என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வரை பணி செய்து கொண்டிருந்த பிவி ராமானுஜம், அதன் பின்னர் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டது அவரது மனைவிக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் உடனடியாக வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாகவே பிவி ராமானுஜம் மன அழுத்தமாக இருந்ததாகவும் வேலை சுமை அதிகம் இருந்ததால் அவர் மிகவும் சோர்வாக இருந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலைச் சுமை அதிகம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். பிடிஐ செய்தி நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்த ஒருவரே வேலை சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது