31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட். இஸ்ரோ சாதனை
- IndiaGlitz, [Friday,June 23 2017]
இஸ்ரோ நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட், 31 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே கார்ட்டோசாட்' வகை செயற்கைகோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரும் நிலையில் 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் சரியாக இன்று காலை 9.29 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட்டில் கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் என மொத்தம் 31 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த செயற்கைகோள்களின் மொத்த எடை 955 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியில் இருந்து 505 கிமீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கொள்களில் உள்ள அதிநவீன கேமிராக்கள் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.