ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது போக்சோ: மேலும் சில ஆசிரியர்கள் கைதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், மேலும் சில ஆசிரியர்கள் இதே குற்றத்தை செய்து வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் ராஜகோபாலன் மீது அடுக்கடுக்கான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஆன்லைன் வகுப்புகளை நடத்தியபோது ஆபாசமாக பேசுவதாகவும் இதுகுறித்து புகார் அளித்தால் மதிப்பெண்களை குறைப்பேன் என்று மிரட்டியதாகவும் சமூக வலைதளங்களில் மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி வகுப்பின் போது அரைகுறை ஆடையோடு தோன்றுவதோடு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்ததாகவும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி வகுப்பறையிலேயே தவறாக நடந்துகொண்டது பற்றி ராஜகோபாலன் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் மாணவிகள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி சென்னை கேகே நகரில் உள்ள பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் ராஜகோபாலனை போலீசார் பிடித்து விசாரித்தனர்
காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 27 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றிய ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக பிளஸ் ஒன் மற்றும் பிளஸ்டூ மாணவிகள் பலரிடம் பாலியல் தொல்லை செய்தது தெரியவந்துள்ளது. மாணவிகளின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய சுய ரூபம் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியானதை அடுத்து ஆபாச புகைப்படங்களை ராஜகோபாலன் தன்னுடைய செல்போனில் இருந்து அழித்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவற்றை மீட்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ராஜகோபாலன் ஒப்புக்கொண்டதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடைய செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவி மற்றும் தாயாரிடமும் விசாரணை கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout