மேலதிகாரியாக மகள், பெருமையுடன் சல்யூட்ட் அடித்த காவல்துறை உதவி ஆணையர்
- IndiaGlitz, [Monday,September 03 2018]
கடந்த 30 ஆண்டுகளாக பல மேலதிகாரிகளுக்கு சல்யூட் அடித்த காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் முதல்முதலாக உயரதிகாரியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
கடந்த 1985ஆம் ஆண்டு காவல்துறையில் எஸ்.ஐ ஆக பணியில் சேர்ந்து அதன் பின்னர் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக பதவியுயர்வு பெற்று தற்போது ஐதராபாத்தில் ரச்சகொண்டா போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட மல்காஜ்கிரி பகுதி காவல் துறை துணை ஆணையராகப் பணியாற்றி வருபவர் ஏ.ஆர். உமாமகேஷ்வர சர்மா. இவருடைய மகள் சிந்து சர்மா கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.யாக சிந்து சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட சிந்துசர்மா கொங்கலா காலன் என்ற பகுதிக்கு வந்து பார்வையிட்டார். அப்போது அதே இடத்தில் பணியாற்றி வரும் உமாமகேஷ்வர சர்மா, தனது மேலதிகாரியான மகளை பார்த்து சல்யூட் அடித்தார். இதற்கு முன் எத்தனையோ அதிகாரிகளுக்கு சல்யூட் அடித்திருந்தாலும் தனது மகளே தன்முன் மேலதிகாரியாக இருக்கும்போது சல்யூட் அடிக்கும்போது அவர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ' முதல்முறையாக நானும், எனது மகளும் ஒரே இடத்தில் பணியாற்றினோம். எனக்கு மேலதிகாரியாக என் மகள் நியமிக்கப்பட்டார். நான் அவரைப் பார்த்தபோது, என் உயர் அதிகாரி என்பதால், அவருக்கு சல்யூட் அடித்தேன். அப்போது அவரும் மகள் என்ற முறையைக் காட்டிலும், ஒரு போலீஸ் எஸ்.பி. என்ற ரீதியில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், இது குறித்து ஒருவொருக்கொருவர் ஆலோசிக்கவில்லை. வீட்டுக்குச் சென்றால், தந்தை, மகளைப் போலத்தான் பழகுவோம். என் மகளுக்கு நான் சல்யூட் அடித்தது பெருமையாக இருந்தது” என கூறினார்.