குப்புறப் படுக்க வைத்தால் கொரோனா நோயாளியைக் காப்பாற்ற முடியுமா??? புதுத்தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

 

கொரோனா நோய்க்கான சிகிச்சை குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் பல புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரவலைத் தடுக்க மூக்குவழியாகச் செலுத்தப்படும் ஸ்பிரே கண்டுபிடிப்பு பற்றிய தகவலை சீனா வெளியிட்டது. முன்னதாக கொரோனா பரவலைத் தடுக்கும் களிம்பு குறித்த தகவல்களை அமெரிக்கா வெளியிட்டு இருந்தது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை குப்புறப் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்ற தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். ஆனால் இப்படி சிகிச்சை கொடுக்கும்போது அந்நோயாளிக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவின் பெய்ன்பெர்க் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்க வைக்கிறபோது அது அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும் என்றும் அவர்களின் உயிரை எளிதாகக் காப்பாற்றி விடலாம் என்றும் தெளிவுப் படுத்தியுள்ளனர். ஆனால் இப்படி செய்வதன் மூலம் நிரந்தர நரம்பு கோளாறையும் உண்டாக்கி விடுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

நரம்பு பாதிப்பானது ரத்த ஓட்டம் குறைவதன் மூலம் ஏற்படுகிறது என்றும் அது வீக்கத்தை ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தவிர கொரோனா நோயில் இருந்து விடுபடும் பெரும்பாலனவர்களுக்கு மணிக்கட்டு, கணுக்கால் அல்லது தோள்பட்டை போன்ற முக்கியமான மூட்டுகளில் பலவீனம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு உடலில் ஒருபக்கத்தில் முடக்கத்தையும் ஏற்படுத்துகிறது. கொரோனாவைத் தவிர்த்து வேறு எந்த நோய்ப் பாதிப்பிலும் இத்தனை சிக்கல்கள் இல்லை என்றும் அந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 12-15% பேருக்கு நிரந்தர நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலையும் அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டு பாதிப்பு, கணுக்கால் பாதிப்பு, கை செயல்பாடு இழப்பு, தோள்பட்டை முடக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும் தகவல் கூறப்படுகிறது.

நீரிழிவு போன்ற நோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மேலும் கொரோனா வைரஸ் தாக்கும்போது அது பெரும் சிக்கலை ஏற்படுத்து வதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் நடக்கவும் கணினி, செல்போன் போன்ற பொருட்களைப் பயன்படுத்தவும் சிரமப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.