கேரளாவில் மதுவிலக்கு வாபஸ்: அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
- IndiaGlitz, [Thursday,June 08 2017]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மதுக்கடைகளினால் அதிக வருமானம் அரசுக்கு வந்தபோதிலும் போராட்டக்காரர்கள் உதாரணமாக கூறுவது அண்டை மாநிலமான கேரளா மற்றும் பீகார் மாநிலங்களைத்தான். அந்த மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தியும் அரசு முன்னேற்ற பாதையில் செயல்படும்போது தமிழகத்தால் மட்டும் ஏன் முடியாது? என்பதுதான் போராட்டக்காரர்களின் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் இன்று நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கை வாபஸ் வாங்க அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவினை அடுத்து இதுவரை கேரள மாநிலம் முழுவதும் மூடப்பட்டிருந்த 730 மதுபான பார்கள் திறக்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி மதுக்கடைகளில் கள் விற்கவும் அரசு அனுமதித்துள்ளது.
கேரள அமைச்சரவையின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவால் தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் வலுவிழக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.