விஷால் அதிரடி முடிவால் அஜித்-விஜய் படங்களுக்கு சிக்கல்?
- IndiaGlitz, [Wednesday,May 03 2017]
சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றிய நடிகர் விஷால், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின்படி தயாரிப்பாளர்களின் முன்னேற்றத்திற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் வைத்து, அந்த கோரிக்கைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 1 முதல் வேலைநிறுத்தம் என்றும், அதை தவிர வேறு வழியில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில் விஷால் கொடுத்த கெடு முடிவடைய இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் அவருடைய கோரிக்கைகளை கண்டுகொண்டதாக தெரியவில்லை. எனவே ஜூன் 1 முதல் வேலைநிறுத்தம் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. வேலைநிறுத்தம் என்றால் படவேலைகள் முடக்கம், ரிலீஸ் கிடையாது, படப்பிடிப்பு கிடையாது, எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என எந்தப போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
சுமார் 20 வருடங்களுக்கு முன் இதேபோன்று நடந்த ஒரு வேலை நிறுத்தத்தால் அன்றாட பணியாளர்கள் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டனர். அதுபோன்ற ஒரு நிலைமை வந்துவிடுமோ என்று சினிமா தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அதிக பட்ஜெட் செலவு செய்து தயாராகி வரும் அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 'தளபதி 61' உள்பட பல படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் முடங்கும் என்பதால் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியுமா? என்ற சிக்கலும் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் நலனுக்காகத்தான் இந்த வேலை நிறுத்தம் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பார்களா? அல்லது ஒருசில படங்களின் பணிகள் பாதிக்கக்கூடாது என்ற காரணத்தால் வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்பது ஜூன் 1ஆம் தேதி நெருங்கும்போதுதான் தெரியும்,