புரமோஷனுக்கு வரவில்லை என்றால் சம்பளம் கட்: த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை
- IndiaGlitz, [Saturday,February 22 2020]
த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் புரமோஷன் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு எதிர்பாராத காரணத்தால் த்ரிஷாவால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கலந்து கொண்டு பேசியதாவது:
திருஞானம் என்னுடை நெருங்கிய நண்பர். படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, பார்த்த நண்பர்கள் படம் அருமையாக இருப்பதாக சொன்னார்கள். படத்தினுடைய ரீ ரெக்கார்டிங் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள். அம்ரீஷுக்கு படம் இன்னும் சரியாக அமையவில்லை, ஆனால் அவருக்கு நேரம் இருக்கிறது கண்டிப்பாக மேலும் உட்சத்தை தொடுவார்.
திருஞானம் எவ்வளவு கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்தார் என்று எனக்கும் தெரியும். இன்றைக்கு பெரிய ஹீரோக்களை போட்டு எடுக்கும் படங்களே போட்ட காசை எடுக்கிறதா என்பது கேள்வி குறியாக இருக்கும்போது ஹீரோவே அல்லாமல் பிஸினஸிற்கான பேஸ்கூட இல்லாமல் ஸ்டார் வேல்யுவோடு ஒரு படம் செய்திருக்கிறார். அந்த படத்தை திரையில் அவரே வெளியிடவும் செய்கிறார். முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து பண்ணிக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்த படம் வெற்றியடையும், போட்ட காசை எடுக்கும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.
இருந்தாலும் ஒரு பெரிய ஹீரோ வைத்து படம் எடுக்கும்போது ஹீரோயின் புரொமோஷனுக்கு வருகிறாரோ இல்லையோ ஹீரோவை வைத்து புரொமோஷன் செய்துவிடலாம். ஆனால், இந்தமாதிரி கஷ்டப்பட்டு ஒரு ஹீரோயினை நம்பி, அவ்வளவு சம்பளம் கொடுத்து படம் பண்ணியிருக்கும்போது, அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்கிற எண்ணம் அது யாராக இருந்தாலும் வரவேண்டும். அது வரவில்லை என்றால் ரொம்ப வருத்தமான விஷயம்.
இந்த படத்தில் புரொமோஷன் பண்ண யாராலும் முடியாது. த்ரிஷாவை தவிர மற்றவர்கள் எல்லாம் அறிமுகமாகவும், புதுமுகமாகவும் இருப்பதால் புரொமோஷன் பண்ண முடியாது. இந்த படத்தின் கதாநாயகி இன்று வரமுடியாதற்கு அவருடைய சூழ்நிலையாக கூட இருக்கலாம் ஆனால் அடுத்த வாரம் ரிலீஸாகும் படத்திற்கு முன்பு நடைபெறும் புரொமோஷனில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை திருப்பி தர வேண்டி வரும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எச்சரிக்கையாக சொல்கிறேன். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்
இவ்வாறு டி.சிவா பேசினார்.