சினிமாவை வாழவைக்க உங்களால் மட்டுமே முடியும்! ரஜினிக்கு டி.சிவா வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கெளதம் கார்த்திக் நடித்த 'இவன் தந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் டி.சிவா, தற்போதைய சினிமா மற்றும் தயாரிப்பாளர்களின் நிலை குறித்து பேசினார். அவர் பேசியதாவது:
"கெளதம் கார்த்திக் நன்றாக வரவேண்டும் என்று நினைக்கும் ஆட்களில் நானும் ஒருவன். ஏனென்றால் அவருடைய அப்பாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். இன்னும் பெரிய வெற்றிகளை அவர் அடைவார் என்று நிச்சயமாக சொல்வேன். அவரைப் போன்ற இளமையான நாயகன், தமிழ் சினிமாவில் தற்போது இல்லை.
தமிழ் சினிமாவின் ஜி.எஸ்.டி வரிக்காக கமல்ஹாசன் உட்பட பலரும் களத்தில் இறங்கி பேசினார்கள். ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் என்று கூறியுள்ளார்கள். கேட்டதற்கு இதாவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு தென்னிந்திய சினிமா சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தணிக்கையில் பல கெடுபிடிகள் இருக்கின்றன. எதனால் இவ்வளவு வழிமுறைகள் என்று தெரியவில்லை. ஒரு படம் தணிக்கைக்கு விண்ணப்பித்து, தணிக்கையாகி வெளியே வருவது, படம் எடுப்பதைவிட அதிக வலியைக் கொடுக்கிறது. இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
6 மாதத்தில் படத்தின் விளம்பரத்துக்கான செலவும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்கள் அனைவருமே அனாதையான மனநிலையில் இருப்பது போன்று உணர்கிறோம். ஜி.எஸ்.டி பிரச்சினைக்காக சென்றால், மத்திய அரசு நம்மை கண்டு கொள்வதில்லை. கடுமையான போராட்டத்துக்கு இடையே தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தத் தருணத்தில் உங்கள் அனைவரது சார்பிலும் ஒரு வேண்டுகோள். ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்தபோது, நான் இருக்கேன் என்று வந்து ஒட்டுமொத்தமாக சரி செய்து கொடுத்தீர்கள். தற்போது தமிழ் சினிமா அனாதை போல் செத்துக் கொண்டிருக்கிறது.
ரஜினி சார்.. ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு சினிமா சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். இப்போது கூட நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் சினிமாவை வாழ வைக்க முடியாது. நீங்கள் சொன்னால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். மத்திய அரசு திரும்பிப் பார்க்கும். உங்களுடைய வார்த்தைக்கு கட்டுப்படும்".
இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments