'கைதி 2' ஆரம்பிக்கலாங்களா? லோகேஷிடம் தயாரிப்பாளர் கேள்வி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆக்சன் படம் என்பதையும் உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தின் தொடர்புள்ள ஒருசில காட்சிகள் இருந்ததையும் படம் பார்த்தவர்கள் சரியாக கண்டுபிடித்து உள்ளனர். அதனால் தான் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ’கைதி’ படத்தை பார்த்துவிட்டு ’விக்ரம்’ படத்தை பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கலாங்களா? என ‘கைதி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’கைதி 2’ திரைப்படம் விரைவில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’கைதி’ திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக இருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அந்த படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று கூறப்படுகிறது.