நீ ஒரு மினி சகலகலா வல்லவன்: வெங்கட் சுபா மறைவு குறித்து டி.சிவாவின் உருக்கமான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் வெங்கட் சுபா அவர்கள் இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் மறைந்த வெங்கட் சுபா அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பிரபல தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் தனது நண்பனின் மறைவு குறித்து உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள் ஆயிரமாயிரம் நினைவுகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்காவிட்டாலும் நான் சொன்னால் கேட்பான் ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச்சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜாணுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை திட்டங்களை கனவுகளையும் அழித்து விட்டது.
சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு? ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கொரோனாவுக்கு என் உடன் பிறந்த சகோதரணை பறி கொடுத்தேன். இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறி கொடுத்துவிட்டேன்.
வெங்கட், மறக்க முடியாதடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட்டா இந்த கொரானாவை எதிர்த்து உன்னை காப்பாற்ற உன் மனைவியும் உறவுகளும் நண்பர்களும் நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு போராடியது ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா, வெங்கட். கொரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட் தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாரு உன்னை தினம் தொட்டு வணங்கி கொள்கிறேன்.
இவ்வாறு டி சிவா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com