'கபாலி', 'தெறி' படங்களை விற்று தருவோம். ஞானவேல்ராஜா வாக்குறுதி
- IndiaGlitz, [Monday,March 06 2017]
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் புது அணியாக உருவாகியிருக்கும் விஷால் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது:
தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு அவர்கள் கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது அனைத்து தயாரிப்பாளர்களின் படங்களையும் சாட்டிலைட் உரிமை விற்பனை செய்ய உதவி செய்வேன் என்பதுதான். ஆனால் அவர் சொன்னதை செய்யவில்லை. அதே நேரத்தில் அவருடைய படங்களான 'கபாலி', 'தெறி' படங்களின் சாட்டிலைட் உரிமைகளையும் அவர் விற்பனை செய்யவில்லை.
ரஜினியை வைத்து படமெடுத்த ஒரு தயாரிப்பாளர் அந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கூட விற்காமல் இருந்த ஒரே தயாரிப்பாளர் தாணு அவர்கள்தான். இவர் தயாரித்த படத்தையே சாட்டிலைட் உரிமையை விற்க முடியாதவர், எப்படி நலிந்த தயாரிப்பாளர்களின் படங்களை விற்று தருவார்?
எனவே எங்கள் டீமின் முதல் வேலை ரஜினி படமாக இருந்தாலும் சரி, ரிஷிகாந்த் படமாக இருந்தாலும் சரி அவரவர் மார்க்கெட்டின் மதிப்புக்கு ஏற்றவாறு சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்ய ஒரு வருடத்திற்குள் முயற்சி செய்வோம். மேலும் தாணு விற்க முடியாமல் வைத்துள்ள 'கபாலி', 'தெறி' படங்களின் சாட்டிலைட் உரிமைகளையும் விற்றுத்தர உதவி செய்வோம்' என்ற உறுதியையும் தருகிறேன் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசினார்.
மேலும் நடிகர் சங்கத்தில் விஷால் மட்டுமின்றி அனைத்து உறுப்பினர்களும் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதால் இன்றைக்கு கடனை எல்லாம் அடைத்து சொந்த காசில் பில்டிங் கட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். அதுபோன்ற ஒரு நிலையை தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏற்பட விஷால் டீமை அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசினார்.