பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி என்பவர் ஷாருக்கான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ ’தில்வாலே’ ’ஹாப்பி நியூ இயர்’ ’ரா ஒன்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் இவரது மகள் ஷாஜியா என்பவர் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று மும்பை திரும்பிய நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தகுந்த சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பாளர் கரீம் மொரானி வீட்டில் மொத்தம் ஒன்பது பேர் இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஷாஜியா ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை திரும்பி வந்ததாகவும், ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா குறித்த எந்த அறிகுறியும் அவருக்கு இல்லை என்றும், ஆனால் திடீரென நேற்று அவருக்கு கொரோனா அறிகுறி தெரிந்ததை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது ஷாஜியா தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.