'பொன்மகள் வந்தாள்' விவகாரம்: கலைப்புலி எஸ் தாணுவின் வேண்டுகோள்
- IndiaGlitz, [Tuesday,April 28 2020]
ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆகவிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மற்றும் அவரை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து இருப்பது குறித்து கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது.
இன்றைய சூழ்நிலையில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் ஆத்திரமடைந்து தடை விதித்துள்ளனர். இந்த படம் திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் வெளியாகி ஏப்ரல் மாதம் திரையில் ஓடி, மே மாதம் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகி இருக்கும். ஆனால் மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாகாமல் இருந்தது.
தற்போது ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகவில்லை என்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த நஷ்டம் அடைய நேரிடும். அதனால்தான் அவர்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிடுகிறார்கள். இதனை தயவுசெய்து தடுக்க வேண்டாம். திரையரங்குகள் அழிந்துவிடும் என பயப்படவேண்டாம். திரையரங்குகளுக்கு எந்த காலத்திலும் அழிவே வராது. இதற்கு முன்னரும் பலமுறை இது போன்ற சோதனைகள் வந்தபோதும் திரையரங்குகள் அழியவில்லை.
தொலைக்காட்சி வந்தபோதும் சரி, வீடியோ டெக் வந்தபோதும் சரி, இணையதளத்தில் திரைப்படங்கள் வெளியான போதிலும் சரி, திரையரங்குகள் அழிந்துவிடும் என்று தான் நினைத்தோம். ஆனால் திரையரங்குகள் அழியவில்லை என்பதுதான் உண்மை. ஓடிடி பிளாட்பாரத்தை வைத்திருக்கும் நிறுவனங்கள் வருடத்திற்கு சில குறிப்பிட்ட படங்கள் மட்டுமே வாங்குவார்கள். அதிலும் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் தான் வாங்குவார்கள். அத்திபூத்தால்போல் தற்போது சிறிய படங்களையும் வாங்கி இருப்பதை நாம் வரவேற்று அனுப்பி வைக்க வேண்டும். அதனை தடுக்க முயற்சிப்பது சரியாகாது.
நான் உட்பட பல தயாரிப்பாளர்கள் நல்ல படத்தை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் எடுத்து வைத்திருக்கின்றோம். அந்த படங்கள் எல்லாம் எப்போது ரிலீசாகும் என்று தெரியவில்லை. எனவே தயாரிப்பாளரின் கஷ்டத்தை கருதி கொண்டு, ஓட்டி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ள ’பொன்மகள் வந்தாள்’ படத்தை திரையிட அனுமதியுங்கள். ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் இயல்புநிலை திரும்பியவுடன் நாம் அனைவரும் உட்கார்ந்து பேசி இதுகுறித்து நல்ல முடிவை எடுக்கலாம்’ இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் கூறியுள்ளார்.