தமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸை ஒழிக்க நாடு முழுவதிலும் உள்ள தொழிலதிபர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் தாராளமாக நிதி வழங்கி வரும் நிலையில் தமிழ் திரையுலக தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜேஎஸ்கே சதீஷ்குமார் தமிழக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசிடம் ரூ.2 லட்சம் நிதியளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நீதி தேவைப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, நான் எனது பங்காக ரூபாய் இரண்டு லட்சம் நிதி வழங்கியிருக்கிறேன். பாலிவுட்டில் அக்ஷயகுமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதுபோல் தெலுங்கு தேசத்தில் தெலுங்கு நடிகர்கள் பலரும் பெரும் தொகையினை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படத்துறையினரும் நிதி வழங்க முன்வரவேண்டும்.
திரைத்துறை என்பது பொதுமக்களோடு நேரடி தொடர்புடைய துறையாக விளங்கி வருகிறது. அவர்கள் நமக்கு ஆதரவு தரவில்லை என்றால் திரையுலகமே முடங்கிவிடும். நடிகர்களை இளைஞர்கள் தங்களது குடும்பத்திற்கும் மேலாக மதித்து கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் இன்று கொடூர வைரசினால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய உயிரே பறிபோகும் நிலையில் தவித்து வருகீறார்கள்.
அவர்களை காக்க உதவ வேண்டியது நமது கடமையாக உணர்ந்து தமிழ் திரைப்படத் துறையில் தன்னுடைய கடுமையான உழைப்பால் மக்களின் மனங்களை வென்று உயர்ந்து நிற்கும் உச்ச நட்சத்திரங்கள், முன்னணி கதாநாயகர்கள். கதாநாயகிகள், முன்னணி இயக்குநர்கள், முன்னணி இசையமைப்பாளர்கள். முன்னணி தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய பங்காக நிதியுதவி அளித்து இந்த கொடிய தாக்குதலிலிருந்து போர்க்கால அடிப்படையில் மக்களை மீட்டெடுக்க அரசுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சதீஷ்குமார் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments