அந்த தவறை செய்ய மாட்டேன், செய்யவும் விடமாட்டேன்: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

  • IndiaGlitz, [Thursday,February 24 2022]

நடிகர் சங்க தேர்தல் குறித்த தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் அந்த தவறை நான் செய்ய மாட்டேன் என்றும் வேறு யாரையும் செய்ய விடமாட்டேன் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்ட நிலையில் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பில் நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரத்தில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது கருத்தை கூறியுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

2020ஆம் ஆண்டில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வந்தது. ஆனால் அதற்கு மேல் முறையீடு செய்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த மேல்முறையீடு போகாமல் இருந்திருந்தால் இந்த இரண்டு வருடத்தில் கட்டிடம் கட்டி முடித்து வாடகை பெற்றிருக்கலாம் .எல்லா நடிகர் சங்க உறுப்பினர்களின் கஷ்டங்களை போக்கி இருக்கலாம்.

ஆனால் அந்த மேல்முறையீடு போனதால் இன்று இரண்டு வருஷம் ஆகிவிட்டது, கட்டிடமும் கட்டி முடிக்கவில்லை. அந்த தவறை நான் செய்ய மாட்டேன். வேறு யாரையும் செய்ய விட மாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.