சர்காருக்கு ஆதரவாக அதிரடியாக களமிறங்கிய தயாரிப்பாளர் சங்கம்
- IndiaGlitz, [Monday,November 05 2018]
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வரவேற்க இன்று இரவு விடிய விடிய விஜய் ரசிகர்கள் தியேட்டர்கள் முன் பேனர், கட் அவுட்டுகள் மற்றும் பட்டாசுகளை வெடித்து அமர்க்களப்படுத்த தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை மாலையே 'சர்கார்' படத்தின் எச்.டி. பிரிண்ட் தங்கள் இணையதளத்தில் வரும் என தமிழ் ராக்கர்ஸ் சவால் விடுத்துள்ளது. இந்த சவாலை முறியடிக்கும் வகையில் களமிறங்கியுள்ள தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 23-ம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, நவ., 6-ம் தேதி வெளியாகும் திரைப்படங்களை, தியேட்டரில் எவரேனும் வீடியோ கேமராவிலோ அல்லது மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா என்று கண்காணிக்க, அந்தந்த தியேட்டர்கள் உரிமையாளர்கள் ஆட்களை நியமிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம். மேலும் எல்லா தியேட்டர்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சொல்லியிருந்தோம். அதை இக்கடிதம் வாயிலாக நினைவூட்டுகிறோம்.
தற்போது தமிழ்ராக்கர்ஸ் என்ற நம் உழைப்பை சுரண்டும் திருடன், 'சர்கார்' படம் வெளியாகும் அன்றைய தினமே படத்தின் ஹெச்.டி., பிரின்ட்டை மாலை வெளியிடுவோம் என சமூகவலைதளங்களில் சவால் விட்டுள்ளனர். நாம் ஒன்றாக இணைந்து மேற்படி தியேட்டர்களில் கண்காணிப்பு ஆட்களை நியமித்து, தீவிரமாக கண்காணித்து, எவரேனும் படம் பிடித்தால் அவர்களை உடனடியாக போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.