என் அளவுக்கு தமிழ் பேச முடியுமா? கன்னடர் என கூறியவர்களுக்கு பிரகாஷ்ராஜ் ஆவேச பதில்

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 5 அணி போட்டியிடுவதால் அனைத்து தரப்பினர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் தலைமையிலான அணியினர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை சென்னையில் நடத்தினர். இந்த சந்திப்பில் நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் ஆவேசமாக பேசினார்.

பத்து வருடங்களாக தயாரிப்பாளர் சங்கத்தினர் சோம்பேறிகளாக இருந்துள்ளனர். ஒரு பிரச்சனை என்று சங்கத்திடம் சென்றால் ஒத்துழைக்க மாட்டார்கள். நான் தனி ஆளாகவே என்னுடைய பிரச்சனையை சந்தித்தேன்.

நான் மட்டுமல்ல, இங்குள்ள அனைவருமே தயாரிப்பாளர் சங்கத்தினரால் நொந்துபோய் தற்போது நேரடியாக களமிறங்கியுள்ளோம். நான் இருபது படங்கள் வரை தயாரித்துள்ளேன். ஒரு தயாரிப்பாளருக்கு என்னென்ன கஷ்டங்கள் வரும் என்றும், அதற்கு என்ன தீர்வு என்றும் எனக்கு தெரியும். இனிமேல் நாங்கள் யாரிடமும் புகார் கூற செல்ல போவதில்லை. நாங்களே களத்தில் இறங்கிவிட்டோம்.

நான் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் என்னை கன்னடர் என்று கூறுகின்றனர். என்னை தமிழர் இல்லை என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. என் அளவுக்கு உங்களால் தமிழ் பேச முடியுமா? தமிழ் இலக்கியம் பேச முடியுமா?

விஷால் கூறியதை போல ஒரு வருடத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்போம் என்று உறுதி கூறுகிறேன்' என்று பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.