'மிக மிக அவசரம்' ரிலீஸ் பிரச்சனை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை
- IndiaGlitz, [Saturday,October 12 2019]
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் நேற்று வெளியாகவிருந்த நிலையில் திடீரென இந்த படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. சித்தார்த்தின் ‘அருவம்’ மற்றும் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் குறித்த திடீர் அறிவிப்பே இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் வி ஹவுஸ் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திரு.சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “மிக மிக அவசரம் திரைப்படத்தினை 11.10.2019 வெள்ளி க்கிழமை இன்று தமிழகமெங்கும் வெளியிட திட்டமிட்டு அதற்காக விளம்பரங்கள் மற்றும் போஸ்டர், திரையரங்கு உறுதிசெய்து அதற்கான வேலைகளை கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக தயாரிப்பு நிறுவனத்தினர் செய்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் திரு சித்தார்த் நடித்த “அருவம்”, நடிகை தமன்னா நடித்த “பெட்ரோமாக்ஸ்” திரைப்படங்கள் 11.10.2019 வெளிவரும் என்ற அறிவிப்பின்பேரில், ஏற்கனவே ’மிக மிக அவசரம்’ திரைப்படத்தினை திரையிட ஒப்புக்கொண்ட திரையரங்குகள் திடீரென்று அவர்களின் நிலைப்பாட்டினை மாற்றி திரையரங்குகளை மேற்படி திரைப்படம் திரையிட மறுக்கப்பட்டது மிகவும் கண்டிக்கதக்க ஒன்றாகும்.
மேலும், ’மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக அந்த திரைப்படத்தின் வெளியீட்டாளர் லிப்ரா புரடொக்சன்ஸ் திரு.ரவீந்த் சந்திரசேகரன் அவர்கள் ரூ.85 லட்சத்திற்கும் மேலாக செலவு செய்துள்ளார், தற்போது வெளியான இரண்டு திரைப்படங்களை விட ’மிக மிக அவசரம்’ திரைப்படத்திற்கு விளம்பர செலவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது போன்று திரைப்படம் வெளியாகும் இறுதிநாட்களில் புதியதாக ஒரு திரைப்படம் வெளிவருவதாக கூறி திரையரங்குகள் தர திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் செயலாகும். இதனை ஒழுங்கு படுத்தும் வகையில் கூடிய விரைவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து ஒரு நல்ல விதிமுறைகளை ஏற்படுத்தும் என்பதை இதன் மூலம்
தெரிவித்துக் கொள்கிறோம்.