3 நாட்களுக்கு பின்னரே திரைப்பட விமர்சனம்: தயாரிப்பாளர் சங்க தீர்மானம் சாத்தியமாகுமா?
- IndiaGlitz, [Monday,September 19 2022]
நேற்று தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் மூன்று நாட்களுக்கு பின்னர் தான் திரைப்பட விமர்சனம் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 500 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்ட நிலையில் அதில் ஒன்று புதிய திரைப்படம் வெளியானால் அந்த திரைப்படத்தின் விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்துதான் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஊடகங்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு புதிய திரைப்படம் 4 மணி காட்சி வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே விமர்சனங்கள் டுவிட்டரில் பறந்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் என்பது சாத்தியமாகுமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியபோது முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாவதால் அந்த படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப் படுவதாகவும் அதனை கருத்தில் கொண்டு மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் எழுத வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் ஊடகங்கள் தரப்பிலிருந்து கூறப்படுவது என்னவெனில் ’ஒரு திரைப்படத்தின் விமர்சனம் முதல் காட்சி முடிந்தவுடன் வெளியாகி அந்த விமர்சனம் பாசிட்டிவ்வாக இருந்தால் அந்தப் படம் மிகப் பெரிய அளவில் மூன்றே நாட்களில் வெற்றி அடைந்து விடும் என்றும் எனவே உடனடி விமர்சனம் என்பது ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியமானது என்று கூறிவருகின்றனர்.
ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உடனுக்குடன் விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.