கொரோனா பாதிப்பினால் வீட்டுத் தனிமை- பட்டினியால் சுருண்டு விழுந்து முதியவர் உயிரிழந்த சோகம்!!!
- IndiaGlitz, [Thursday,August 20 2020]
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தின் டி.பிலகள்ளு என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரித்து எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம தேதி முதியவரை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறது. ஆம்புலன்ஸை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம். நீங்கள் மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.
ஆனால் முதியவரோ நான் வீட்டுத் தனிமையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிலேயே சிகிச்சை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. முதியவருக்கு கொரோனா உறுதிசெய்யப் பட்டதால் அவருடைய மகன், மருமகள் எல்லாம் கிராமத்தில் உள்ள மற்ற உறவினர்களின் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முதியவரை பராமரிக்க ஆளில்லாமல் பட்டிணியாகக் கிடந்ததாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடும் பட்டிணியால் வாடிய அந்த முதியவர் தரையில் சுருண்டு விழுந்ததாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் முதியவரின் வீட்டிற்கு வந்து சோதனை செய்து பார்த்த அதிகாரிகள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். மேலும் உரிய விதிமுறைகளுடன் அவரை அடக்கமும் செய்திருக்கின்றனர். இந்நிகழ்வு குறித்து முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பல்லாரி மாவட்டத்தின் கலெக்டர் நகுல் தற்போது உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்த முதியவர் உணவின்றி உயிரிழ்ந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.