மெரீனா போராட்டத்தில் ஒசாமா பின்லேடன். ஆதாரம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ்
- IndiaGlitz, [Friday,January 27 2017]
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய அறவழி போராட்டம் ஆறு நாட்களாக அமைதியாக நடந்தது. தமிழக, மத்திய அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியபோதிலும் எந்த நேரத்திலும் அவர்கள் வன்முறையை பின்பற்றவில்லை. அதுமட்டுமின்றி இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் கலந்து கொள்ளாமல் போராட்டக்காரர்கள் மிகவும் கவனமாக இருந்தனர்.
இந்நிலையில் ஏழாவது நாளில் காவலர்கள் போராட்டக்காரர்களை வெளியேற்ற முயன்றதால் முதலில் தள்ளுமுள்ளு, பின்னர் தடியடி அதன்பின்னர் கலவரம் என திசை மாறியது. இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் கும்பல் மாணவர்களின் கூட்டத்தில் கலந்ததாக அரசு தரப்பும், காவலர்களே தீ வைத்து கலவரத்தை பெரிதாக்கியதாக மாணவர்கள் தரப்பும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் முதல் மூன்று நாள் அமைதி வழியில் நடந்ததாகவும், பின்னர் இந்த கூட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகவும் குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாகவும், அதற்கான ஆதாரங்கள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட போராட்டத்தின் அனைத்து பகுதிகளையும் முன்னணி மீடியாக்கள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பி வந்த நிலையில் மீடியாக்களின் கண்களுக்கு தெரியாத பின்லேடனின் பட ஆதாரம் தமிழக அரசுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது.